கலைஞர் பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சட்டசபையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தமிழகத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் இல்லை என்றும் காமராஜர், பெரியார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பெயர்களில் பல்கலைக்கழகம் உள்ள நிலையில் கலைஞர் பெயரில் இல்லை எனவும் கூறினார். நேரு, இந்திரா காந்தி பெயரில் பல்கலைக்கழகங்கள் உள்ளதாகவும், அதேபோல் கலைஞர் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் கூட இல்லை என்றும் கூறினார்.

அரசியல் ரீதியாக தி.மு.க. - பா.ம.க. இடையே கருத்து வேறுபாடு இருந்தாலும் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கோருகிறோம் என்றும் கலைஞர் மீது இருக்கும் மரியாதை அடிப்படையில் தான் அவர் பெயரில் பல்கலைக்கழகம் வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதனை அடுத்து பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்தார். கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர் கருணாநிதி என்றும் கலைஞர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் அவரது பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படுகிறது எனவும் கூறினார்.

மேலும், பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்றும் புகழாரம் சூட்டினார்.