தமிழக அமைச்சர்களில் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர்கள் ஒரு சிலர்தான். அதில் முதலில் இருப்பது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். குறிப்பாக நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக அமைச்சர் என்ற பெருமையும் கொண்டவர்.
அதனால் தான் இவருக்கு திமுக ஆட்சி அமைந்தபோது தமிழக நிதியமைச்சராக நியமிக்கப்பட்டார். அவரின் சிறப்பான செயல்பாடுகளை தமிழ்நாடே பாராட்டியது. ஆனால் சில காரணங்களால் அவரது துறை மாற்றப்பட்டது. அவருக்கு தகவல் தொழில்நுட்பத்த துறை ஒதுக்கப்பட்டது. அந்த துறையிலும் தன்னுடைய சக்திக்கு மீறிய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பிடிஆர் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் அமைச்சர் பிடிஆர் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. கடந்த வாரம் சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக்கோரிக்கை மீது உரையாற்றிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “என்னுடைய துறையில் இருக்கிற சிக்கல்களை கூறி இருக்கிறேன். நிதியும் மிகவும் குறைவாக ஒதுக்கப்படுகிறது. மற்ற மாநிலங்கள் போல் எல்லா தொழில்நுட்ப பூங்காக்களும் எங்கள் துறையில் செயல்படுவதில்லை. ஒரு சிலது மட்டுமே செயல்படுகிறது.
பாக்கி டைடல், நியோ டைடல் எல்லாம் தொழில் துறையில் செயல்பட்டு வருகிறது. அது அசாதாரணமான சூழ்நிலையாக இருந்தாலும். அதுதான் 20 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே யாரிடம் நிதியும் திறனும் அதிகாரமும் இருக்கோ அவரிடம் கேட்டால் அவர் செய்து கொடுப்பார் என்று நான் கருதுகிறேன். எங்களிடம் அது இல்லை” எனக்கூறியிருந்தார்.
இதையும் படிங்க: "வெறும் வாய்க்கு அவல் கொடுக்காதீங்க" - பிடிஆருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்..!

இதனையடுத்து கடந்த 23ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில், நீதிக்கட்சியின் தலைவராக இருந்தவரும், பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனின் தாத்தாவுமான பி.டி.ராஜனின் ‘வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “இந்த சொல்லாற்றல் அவருக்கு பலமானதாக இருக்குமே தவிர பலவீனமாக ஆகிவிடக்கூடாது.
அவருக்கே தெரியும். நம்முடைய எதிரிகள் வெறும் வாயை மெல்லக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். அவங்களுக்கு சொல் அல்ல அது, ஆவலாக ஆகிவிடக்கூடாது. என் சொல்லை தட்டாத பிடிஆர் என்னுடைய அறிவுரையும் அர்த்தத்தையும் ஆழத்தையும் நிச்சயம் புரிந்து கொள்வார் என நம்புகிறேன்” என பிடிஆருக்கு அட்வைஸ் வழங்கினார்.

இதனிடையே, விரைவில் தமிழக அமைச்சரவை ஆறாவது முறையாக மாற்றி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டப்பேரவை இந்த மாத இறுதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறை அமைச்சர்கள் குறித்தும் விரிவான ரிப்போர்ட் அதிகாரிகள் மட்டத்திலும், உளவுத்ததுறை சார்பிலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த அறிக்கைகளின் அடிப்படையில் அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளதுடன் சில இடமிருந்து அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட உள்ளது.

அதோடு புதிய இருவருக்கு மாற்றி அமைக்கப்பட உள்ள அமைச்சரவையில் இடமும் கொடுக்கவிருக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அத்துடன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் புதிய துறை அல்லது கூடுதல் துறையை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளாராம்.
குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளதால், அவர் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்வுத்துறையை பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு வழங்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “எனக்கு அதிகாரமே இல்ல” - பேரவையிலேயே புலம்பிய அமைச்சர் பிடிஆர்!