புதிய தலைமை தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுப்பதற்காக, உயர் மட்ட தேர்வு குழு கூட்டம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மத்திய அமைச்சர் ஒருவர் ஆகியோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் புதிய தலைமை தேர்தல் ஆணையர் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. தற்போதைய சூழ்நிலையில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி பணி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான ஞானஷ் குமார் தேர்வு செய்யப்படலாம் என்று டெல்லி தேர்தல் ஆணைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி தவிர பிரதமரால் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஒருவர் இந்த தேர்வு குழு கூட்டத்தில் பங்கேற்பார். பதவி விலக இருக்கும் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு பிறகு தற்போது ஞானேஷ்குமார் மூத்த தேர்தல் அதிகாரியாக இருந்து வருகிறார். கூடுதலாக தேர்தல் ஆணையத்தின் காலியாக உள்ள மூன்றாவது இடத்தை நிரப்ப புதிய தேர்தல் ஆணையரும் நியமிக்கப்படுவார். இப்போது தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் ஆணையர்களை நியமிப்பதற்கான புதிய சட்டபூர்வ விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திமுக எம்.பி.9-வது இடம்! மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளரின் சராசரிச் செலவு: தேர்தல் ஆணையம் அறிக்கை
அதற்கு முன்பாக மீதமுள்ள இரண்டு தேர்தல் ஆணையர்களில் மூத்தவர் பொதுவாக தேர்தல் ஆணைய ஆலோசனைகளை தொடர்ந்து புதிய தலைமை ஆணையர் பதவிக்கு உயர்த்தப்பட்டு வந்தார். தற்போது திருத்தப்பட்ட தேர்வு செயல்முறையின்படி தேர்வு குழுவிற்குள் பெரும்பான்மை அல்லது ஒருமித்த முடிவு அடிப்படையில் நியமனங்கள் செய்யப்படுகின்றன. இந்த நியமன செயல்முறை தொடர்பான பல பொதுநல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த வழக்குகள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வருகிற 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்து இருக்கிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி 25 ஆவது தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்ற ராஜீவ் குமார் தனது பதவி காலத்தில் பல முக்கிய தேர்தல்களை மேற்பார்வையிட்டு இருக்கிறார்.2022 ஆம் ஆண்டில் 16 வது ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல்களையும், 11 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களையும் நடத்துவதற்கு அவர் பொறுப்பு ஏற்று இருந்தார். அவருடைய தலைமையில் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் - ஜூன் மாதங்களில் மக்களவைத் தேர்தலையும் ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்கு மேல் நடத்தப்படாமல் இருந்த முதல் சட்டமன்ற தேர்தலை நடத்தியது ஆகியவை குறிப்பிடத்தக்கன.

அவரது இறுதிப் பணி, சமீபத்தில் நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலாகும். தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவதற்கு முன்பு ராஜீவ் குமார் நிதிச் செயலாளராகவும், பொது நிறுவனங்களின் தேர்வு வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார். வங்கி இணைப்புகள், பொதுத் துறை வங்கிகளின் மறு மூலதனமயமாக்கல் மற்றும் போலி நிறுவனங்களை ஒடுக்குதல் உள்ளிட்ட முக்கிய சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
தனது பதவிக்காலத்தை பற்றி பேசுகையில் ராஜீவ் குமார் ஓய்வுக்கு பிந்தைய திட்டங்களை பற்றி ஏற்கனவே பகிர்ந்து இருந்தார். இமயமலையில் பல மாதங்கள் தனிமையில் செலவிடுவதன் மூலம் தன்னை "நச்சு நீக்கம்" செய்ய விரும்புவதாக அப்போது அவர் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது. "அடுத்த நான்கு ஐந்து மாதங்களுக்கு நான் என்னை நச்சு நீக்கம் செய்து கொள்ள விரும்புகிறேன். ஊடக வெளிச்சத்தில் இருந்து எனக்கு கொஞ்சம் தனிமை தேவை" என்று அவர் கூறியிருந்தார்.

பீகார் - ஜார்கண்ட் கேடரைச் சேர்ந்த இவர் கடந்த 1984 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி ஏற்றார். ஓய்வுக்கு பிறகு "பிற்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பது மூலம் சமூகத்திற்கு பங்களிக்க வேண்டும்" என்ற தனது விருப்பத்தையும் அப்போது அவர் வெளியிட்டிருந்தார். "நான் ஆறாம் வகுப்பில் இருந்து தான் ஆங்கிலத்தில் ஏபிசிடி கற்றுக்கொள்ள தொடங்கினேன். நாங்கள் ஒரு ஸ்லேட்டை எடுத்துக் கொண்டு ஒரு மரத்தடியில் அமர்ந்து படித்தோம். அந்த கடந்த கால வேர்களை தரிசிக்கும் ஒரு ஆர்வமாக அது போன்ற குழந்தைகளுக்கு கற்பிக்க விரும்புகிறேன்'' என்று அவர் மிகவும் உணர்வு பூர்வமாக கூறியிருந்தார்.

புதிய தலைமை தேர்தல் ஆணையர் பதவிக்கு தேர்ந்தெடு தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் ஞானேஷ்குமார் 1988 ஆம் ஆண்டு ஐஏஎஸ் பட்டியலில் கேரளா பிரிவை சேர்ந்தவர். இறுதியாக கூட்டுறவு செயலாளராக பணிபுரிந்து கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். ஏற்கனவே இவர் மத்திய நாடாளுமன்ற விவகார செயலாளராகவும், உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளராகவும் (2019 ஆம் ஆண்டில் அரசியல் சாசன சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சமயத்தில்) பணிபுரிந்தவர்.
இதையும் படிங்க: தேர்தல் ஆணையர் நியமிப்பதில் மத்திய அரசுக்கு கூடுதல் அதிகாரம்.. பிப்.12ம் தேதி விசாரணை!