உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற வேண்டும் எனக்கோரி தனிநபர் தீர்மானம் ஒன்றை திமுக எம்.பி.வில்சன், நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ளார். அதேபோன்று உயர்நீதிமன்ற நீதிபதிகளை, உச்சநீதிமன்ற நீதிபதிகளாக உயர்த்தும்போது மாநில அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் எம்.பி.வில்சன் வலியுறுத்தி உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, உட்பட மொத்தம் 33 நீதிபதிகள் உள்ளனர். உச்சநீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கை 34 ஆகும். தற்போது பணியாற்றும் 33 நீதிபதிகளில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினத்தைச் சேர்ந்த நீதிபதிகள் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்ற புகார் இருந்து வருகிறது.

இந்நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மூத்த வழக்கறிஞரும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன், நாடாளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதற்காக அரசியல் சாசனத்தின் பிரிவு 124,217 மற்றும் 224 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் பெரும் பின்னடைவு… டெபாசிட்டை இழக்கும் நாதக வேட்பாளர்..? மில்கிபூரில் பாஜக படுஜோர்..!
அதுமட்டுமல்லாது கொலிஜீயம் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு காலவரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் எம்.பி.வில்சன் கேட்டுக் கொண்டுள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற இத்தனை ஆண்டுகளில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படாத ஒரு துறை எதுவென்றால் அது நீதித்துறை தான் என்று நாடாளுமன்றத்தில் பேசியபோது வில்சன் குறிப்பிட்டார். அரசியல் சாசனத்தின்படி நாட்டின் பன்முகத்தன்மை பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் எனில், நீதித்துறையிலும் அது எதிரொலிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையிலும், விளிம்புநிலை பிரிவினரைச் சேர்ந்தவர்கள் மிகவும் குறைவு அல்லது இல்லவே இல்லை என்ற நிலையில் தான் நீதிபதிகள் நியமனம் உள்ளதாக வில்சன் குற்றஞ்சாட்டினார். இதனால் அரசியல் சாசனம் எடுத்துரைக்கும் சமநீதி பாதிக்கப்படுவதாகவும் ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். இந்த தனிநபர் தீர்மானம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று மாநிலங்களவை கூறியுள்ளது.
இதையும் படிங்க: மசோதா முரண்பாடுகளை கவர்னர் தெரிவிக்க வேண்டும்..! முட்டுக்கட்டை நீடிக்க கூடாது... மீண்டும் விசாரணை