விடாது கருப்பு என்பது போல இரட்டை இலை வழக்கு இந்தியாவின் எல்லா நீதிமன்றங்களிலும் ஏறி இறங்கி வருகிறது. கட்சிக்கு உரிமை கோரியும், இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரியும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாக வழக்காடி வருகிறார். ஆனால் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செவ்வனே செயல்பட்டு வருகிறது.

தன்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் முடியுமுன்னரே நிர்வாகிகளைக் கொண்டு தன்னை வெளியேற்றியது கட்சி விதிகளுக்கு முரணானது என்பதும் ஓபிஎஸ்-ஸின் வாதம். அந்தவகையில் கட்சியை மீண்டும் தன்வசம் ஒப்படைக்கக் கோரி அவர் சட்ட உதவிகளை நாடி வருகிறார். இதேபோன்று வேறுசிலரும் நீதிமன்றங்களில் அதிமுகவுக்கு உரிமைகோரி வழக்குகளை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’: பாஜக கூட்டணிக்குள் சலசலப்பு: நிதிஷ் கட்சி, ஒய்எஸ்ஆர் கட்சி, எதிர்க்கட்சிகள் சராமரி கேள்வி
இந்த சூழ்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பாக பதில் அளிக்கும்படி எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், உள்ளிட்ட தரப்பினருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதற்கான பதிலை இபிஎஸ் தரப்பில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் டெல்லி சென்று தாக்கல் செய்திருந்தார். ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் பதிலளிக்கப்பட்டது.

இதனிடைய இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் கேள்வி எழுப்பியது குறித்தும், இருதரப்பினர் பதில் அளித்தது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. கட்சி மற்றும் சின்னம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது தேர்தல் ஆணையம் எவ்வாறு இறுதி முடிவு எடுக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் அவ்வாறு முடிவு எடுக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டனர்.

தமிழ்நாட்டில் அதிக காலம் ஆட்சிப்பொறுப்பில் இருந்த கட்சி என்ற சிறப்புடைய அதிமுக, இன்று தனது கட்சி சின்னத்திற்காக தேர்தல் ஆணையம், உயர்நீதிமனறம் என அல்லாடி வருவது அக்கட்சி தொண்டர்களை கவலை கொள்ள செய்துள்ளது. ஆளுங்கட்சியை எதிர்ப்பதற்கு வலுவான எதிர்கட்சியாக ஒன்றிணைய வேண்டும் அல்லது எதிர்ப்புகள் இல்லாமல் செய்ய வேண்டும், அந்த நாள் எப்போது என காத்திருக்கிறான் ரத்தத்தின் ரத்தம்..
இதையும் படிங்க: நீதிமன்றமா-மத்திய அரசா?: தேர்தல் ஆணையர் நியமன வழக்கு: பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்