மாநிலங்களவையில் 2025-26 பட்ஜெட் குறித்த விவாதம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசியதாவது, மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டால் இந்தியாவில் உள்ள நடுத்தரக் குடும்பத்தினர் மட்டும் பயன் அடையவில்லை, அதோடு சேர்த்து இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களும், உலகளவில் முன்னணியில் இருக்கும் கோடீஸ்வரர்களும்தான் பயனடைந்துள்ளனர்.
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிவிலக்கால் 80 லட்சம் முதல் 85 லட்சம் வரி செலுத்துவோர் வரி செலுத்தும் பிரிவில் இருந்து அடுத்த நிதியாண்டிலிருந்து விலக்கு பெறுவர். 2.50 கோடி வரி செலுத்துவோர் புதிய வரிவிதிப்பு முறையால் ஆதாயம் அடைவார்கள்.
இந்த 2.50 கோடி வரி செலுத்துவோர்கள் அனைவரும் நடுத்தரக் குடும்பத்தினர் அல்ல, அவர்களோடு சேர்த்து 2 லட்சத்து 27 ஆயிரத்து 315 பேர் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோர். 262 பேர் ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோர், 23 பேர் ஆண்டுக்கு ரூ.500 கோடிக்கு வருமானம் ஈட்டுவோர் என்பது தெரியுமா.
இதையும் படிங்க: பெயர்தான் 100 நாட்கள் வேலை! 44 நாட்கள்தான் வேலையாம்! நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கவில்லை

வரிவிலக்கு அளித்ததால் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதிஅமைச்சர் தெரிவித்துள்ளார். 2025-26ம் ஆண்டில் மத்திய அரசின் வரி வருவாய் 11.1% உயரும் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் நடப்பு நிதியாண்டிலேயே 11 சதவீதம் வரிவசூல் உயர்ந்துள்ளதே. பிறகு எப்படி ஒரே மாதிரியாக இரு ஆண்டுகளிலும் வரிவசூல் 11 சதவீதம் உயர்வு ஏற்படும்.
நடப்பு நிதியாண்டில் எந்த வரிச்சலுகையும் அளிக்காத நிலையி்ல் வரும் நிதியாண்டில் வரி விலக்கு அளித்துள்ளதால் ரூ.1 லட்சம் கோடி இழப்பு எனத் தெரிவித்தபோதும் 11 சதவீதம் வரிவசூலில் உயர்வு ஏற்படுமா. இது உண்மையில் மாயஜாலம்தான், துல்லியமான கணிதம் அல்ல. இந்த பட்ஜெட் டெல்லி தேர்தலை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது, அரசியல் ரீதியாக இந்த பட்ஜெட் உருவாக்கப்பட்டது.

பட்ஜெட்டுக்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்க வேண்டும், ஆனால் இந்த பட்ஜெட்டில் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பட்ஜெட் உரை மற்றும் பட்ஜெட் எண்களைப் படித்த பிறகு, பட்ஜெட்டுக்குப் பின்னால் எந்த தத்துவமும் இல்லை என்பதால் அதை படிக்க முயற்சிக்கமாட்டேன்.
இந்த பட்ஜெட் அரசியல்ரீதியாக, அரசியல் லாபத்துக்காக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், இதற்கு மேல் இதை விளக்க முடியாது. ஆனால், இரு நாட்களுக்கு முன் லட்சியத்தை(டெல்லி தேர்தல் வெற்றி) அடைந்தமைக்காக நிதிஅமைச்சரைப் பாராட்டுகிறேன். நிர்மலா சீதாராமன் ஒன்றும் செய்யவில்லை, வருமானவரியிலும், டெல்லி தேர்தலை மட்டும் மனதில்வைத்து கவனம் செலுத்தினார்.
மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு(100நாள் வேலைதிட்டம்) ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மீது ஜிஎஸ்டி வரிவிதிப்பு பற்றி முடிவு செய்யவில்லை. 2012- முதல் 2024 வரை உணவுப் பணவீக்கம் 6.18 சதவீதமாக இருந்தது, கல்விப் பணவீக்கம் 11 சதவீதம், சுகாதாரப் பணவீக்கம் 14 சதவீதமாக இருந்தது. இது இந்திய குடும்பங்களை நசுக்கிவிட்டது. வீடுகளில் தாய்மார்கள் சேமிப்பும் குறைந்து 25.2 சதவீதத்திலிருந்து 18.4 சதவீதமாகக் குறைத்துவிட்டது.

மாதத்துக்கு சராசரியாக தனிநபர் ஒருவரின் செலவு கிராமத்தில் ரூ.4226 ஆகவும், நகர்புறங்களில் ரூ.6996ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் சராசரிக் குடிமகனுக்கு இந்த பட்ஜெட் என்ன செய்துள்ளது, என்ன சலுகையை வழங்கியிருக்கிறது தெரிவிக்க முடியுமா.
அதாவது சமூகத்தில் அடித்தளத்தில் இருக்கும் 50 சதவீதம் பேருக்கும், கடைநிலையில் இருக்கும் 25 சதவீதம் பேருக்கும் பட்ஜெட்டால் என்ன பயன். என்னவிதமான நிம்மதியை நிதியமைச்சர் வழங்கியுள்ளார் எனத் தெரிவிக்க முடியுமா. இவர்களுக்காக பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்திருக்கலாம் அதைச் செய்தார்களா. இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சர்கள் ஊதியத்துக்காக ரூ.1,024 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு