பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு சிறப்பு விமானம் மூலம் இன்று அதிகாலை அமெரிக்கத் தலைநகர் வாஷிங்கடன் சென்றடைந்தார் பிரதமர் மோடி. அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் காத்ரா உள்ளிட்ட அதிகாரிகள் அவரை வரவேற்றனர். சிவப்புக் கம்பளத்தில் கம்பீர நடைபோட்ட பிரதமரை அமெரிக்க அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து கௌரவப்படுத்தினர்.

விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க அதிபரின் அதிகாரபூர்வ விருந்தினர் மாளிகையான ப்ளேர் ஹவுஸ் (Blair House) அழைத்துச் செல்லப்பட்டார் மோடி. அங்கு திரண்டிருந்த ஏராளமான இந்திய வம்சாவளியினர் மோடி, மோடி என உச்சஸ்தாயியில் முழக்கமிட்டனர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் கூடியிருந்த அவர்கள் ஒரே குரலில் பாரத் மாதா கி ஜே என்று முழங்கியது உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றுவதாய் அமைந்தது. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் திரண்டிருந்த மக்களுக்கு தனது நன்றியை உரித்தாக்குவதாக பதிவிட்டிருந்தார் பிரதமர் மோடி.
இதையும் படிங்க: ஆர்வம் என்பது பொது நலனுக்கு சமம் அல்ல.. பிரதமரின் கல்வித் தகுதிகளை வெளியிட முடியாது - டெல்லி பல்கலை., விளக்கம்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மீண்டும் பதவியேற்ற பின்னர் இரண்டுமுறை அவருடன் மோடி தொலைபேசியில் பேசியிருந்தார். பிரான்சில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு உச்சிமாநாட்டில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உடன் நேரில் சந்தித்து பேசியிருந்தார். இப்போது ட்ரம்ப்பை நேரில் சந்தித்து உரையாட உள்ளார் பிரதமர் மோடி. இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இருநாட்டு வளர்ச்சியை அடிநாதமாக கொண்டிருக்கும் என்றும் சந்திப்புக்கு முன்னதான அறிக்கையில் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருந்தார்.

இந்த பயணத்தின் போது தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி ஆகிய துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்ற பின்னர் அவரை சந்திக்கும் நான்காவது உலகத் தலைவர், பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, ஜப்பானின் ஷிகுரு இஷிபா, ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் ட்ரம்பை சந்தித்து இருந்தனர்.
இதையும் படிங்க: 26 ரபேல் போர் விமானங்கள், 3 நீர்மூழ்கி போர்க் கப்பல்கள்.. இந்தியா - பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகிறது..