விலங்குகளை மையமாக கொண்டு உலகின் பிறநாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் ஒருசில விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு குதிரைபந்தயம், ஒட்டக பந்தயம், மாட்டுவண்டி பந்தயம் போன்றவை. ஆனால் நேரடியாக காளையை அதன் திமில் பிடித்து தழுவி அடக்கும் விளையாட்டு வேறெந்த பகுதியிலும் இல்லை என்பதில் இருந்தே இதன் தனித்துவத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும்.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் எருதுச் சண்டையை ஒப்பிட்டு சிலர் பேசுவார்கள். ஆனால் அந்த போட்டியின் முடிவில் காளைகள் கொல்லப்படும் அல்லது அடுத்து பயன்படுத்த முடியாத அளவுக்கு உடல் ரணப்பட்டிருக்கும். ஆனால் நம்மூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு என்பது பலமுறை களம் கண்ட காளை என்ற அறிவிப்போடு வெளியாகும். அப்படியெனில் தொடர்ச்சியாக ஜல்லிக்கட்டில் இறங்கும் அளவுக்கு உடல்தகுதியோடு அந்த காளை இருக்கிறது என பொருள். உயிர்வதை நிச்சயம் இல்லை. அதனால் தான் இதற்கு ஏறுதழுவுதல் என பெயர் நிலவுகிறது. திமிலோடு அணைதல் என்பதில் எவ்வளவு வீரம் இருக்கிறதோ அவ்வளவு காதலும் இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் தொடங்கி மே மாதம் வரை பல்வேறு மாவட்டங்களில் ஆங்காங்கே ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஜனவரியில் அதிக அளவிலான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். இந்த ஆண்டின் முதலாவது ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் அதிகம் ஜல்லிக்கட்டு களம் உள்ள மாவட்டமும், அதிக போட்டிகள் நடைபெறும் மாவட்டமும் அதுதான். அங்குள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலயத் திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது..
இதையும் படிங்க: 'ஜில்லா விட்டு ஜில்லா வந்து'நாட்டுப்புற பாடகியின் பரிதாப நிலை ..கலங்க வைக்கும் செல்வி ..!

600 காளைகளும், 320 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ள இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முதலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட பின்னர் வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் அடக்கப் பாய்ந்த காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை, வீரர்களுக்கு உடல்தகுதி சோதனை, பார்வையாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என முறைப்படி பின்பற்றப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது.
தச்சங்குறிச்சியைத் தொடர்ந்து பிரசித்திப் பெற்ற பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டன. மதுரையை அடுத்த கீழக்கரையில் 62 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்காகவே ரோம் நகரின் கலோசியம் பாணியில் மிக பிரம்மாண்டமாக அரங்கு ஒன்று கட்டப்பட்டு கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

"எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு, கவிழ்ந்தன மார்பு, கலங்கினர் பலர்..." என்று கலித்தொகையில் ஜல்லிக்கட்டு விவரிக்கப்படுகிறது. ஈராயிரம் ஆண்டுகளை கடந்தும் ஜல்லிக்கட்டு நம் மரபோடு பின்னிப் பிணைந்து வருவதை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: மதுரையில் பாஜக மகளிர் அணியினரை செம்மறி ஆடுகளுடன் ஒன்றாய் அடைத்து வைத்த காவல்துறை… போலீஸாருடன் வாக்குவாதம்