சந்திராயன் விண்கலம், மங்கள்யான் என உலகை திரும்பி பார்க்க வைக்கும் சாதனைகளை மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் 11வது தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவன் 2018ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை இஸ்ரோ தலைவராக இருந்திருக்கிறார். தற்போது இஸ்ரோவின் தலைவராக உள்ள சோம்நாத் ஓய்வு பெறவுள்ளதை அடுத்து, இஸ்ரோவின் அடுத்த தலைவராக வி.நாராயணன் ஜனவரி 14ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். சிவனுக்கு அடுத்தப்படியாக கன்னியாகுமரியைச் சேர்ந்த 2வது தமிழர் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த வி.நாராயணன்?
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி.நாராயணன் 1984ம் ஆண்டு முதல் இஸ்ரோவில் பணியாற்றி வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளில் அங்கம் வகித்துள்ள இவரது சாதனைகள் மிகவும் நீண்டது, காரக்பூரில் உள்ள ஐஐடியில் படித்த நாராயணன் ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஐஐடி காரக்பூரில் எம்.டெக் படித்த போது சிறந்த மாணவராக விளங்கியதற்காக இவருக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரோனேட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: துப்பட்டாவை கழட்டி வச்சிட்டு வாங்க; முதல்வர் பங்கேற்க நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு நிகழ்ந்த அவலம்!

ராக்கெட் மற்றும் விண்கல உந்துவிசை அமைப்புகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
இஸ்ரோவில் செய்த சாதனைகள்:
இவர் ASLV, PSLV ராக்கெட்டுகளில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். இந்தியாவில் காம்ப்ளக்ஸ் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட கிரையோஜெனிக் அமைப்பு உள்ளது. உலகத்திலேயே இந்த அமைப்பு 6 நாடுகளிடம் மட்டுமே உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்றாக இருக்க காரணமானவர். இஸ்ரேலின் கனவு திட்டங்களான ஆதித்யா விண்கலம், மற்றும் ஜி.எஸ்.எல்.வி எம்.கே 3 ராக்கெட் திட்டங்களில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

ககன்யான் திட்டம் இஸ்ரோவின் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 ஆகிய திட்டங்களிலும் சிறப்பாக பணியாற்றியவர். 2017-ம் ஆண்டில் இருந்து 2037ம் ஆண்டு வரை இந்தியாவின் புரோபல்ஷன் எப்படி செயல்பட வேண்டும். எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்ற ரோட் மேப்பை இறுதி செய்தவர் இவர் தான்.
இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள இவர், இப்போது லிக்விட் புரோபல்ஷன் சிஸ்டம் மையத்தின் இயக்குநராக உள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து:
V. நாராயணன் அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில்… pic.twitter.com/gJvnjoU3jo
— M.K.Stalin (@mkstalin) January 8, 2025
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இஸ்ரோ புதிய தலைவராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் வி. நாராயணன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் உளம்நிறைந்த வாழ்த்துகள்!
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் எளிய பின்னணியில் பிறந்து, அரசுப் பள்ளியில் படித்து, உதவியாளர் நிலையில் இஸ்ரோவில் பணிக்குச் சேர்ந்த நாராயணன் அவர்கள் இன்று அதன் தலைமைப் பொறுப்புக்கு உயர்ந்திருக்கிறார் எனில், அதன் பின் எத்தகைய ஆர்வமும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
#Chandrayaan2, #Chandrayaan3, #AdityaL1, #Gaganyaan என உலக அரங்கில் இந்தியாவின் பெருமைக்குக் காரணமான பல விண்வெளி ஆய்வுத் திட்டங்களில் பங்களித்த - தொடர்ந்து பங்களித்து வரும் #Narayanan அவர்களின் தலைமையில் #ISRO உறுதியாகப் புதிய உயரங்களைத் தொடும்! நாராயணன் அவர்களின் பயணம் அவரைப் போல மேலும் பல தமிழ்நாட்டு மாணவர்கள் சாதனையாளர்களாக உருவாக ஊக்கமளிக்கும்!” என பாராட்டியுள்ளார்.
இதையும் படிங்க: இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்.. மீண்டும் ஒரு தமிழர், இஸ்ரோ தலைவராகிறார்.