அந்த சார் யார் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. செய்தியாளர்களும் காவல் ஆணையரிடம் கேள்வி எழுப்பினர். ‘யார் அந்த சார்’ என்கிற கேள்வியை முன் வைத்து போராட்டத்தை கடுமையாக எடுத்து வருகிறது அதிமுக. சமூக வலைதளங்களிலும் அந்த கோஷம் ஆளுங்கட்சிக்கு தலைவலியாக மாறியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகள் போராடி வருகின்றன. இதில் அதிமுகவின் கோஷம் வித்தியாசமாக உள்ளது. ‘யார் அந்த சார்’ என்று போஸ்டர் வெளியிட்டு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. ‘யார் அந்த சார்’ ஹேஷ்டேக் அதிமுக சமூக வலைதள குழு மூலம் வைரலாக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டர்களை கிழிப்பதா? அல்லது தடுப்பதா? என்கிற தடுமாற்றத்தில் காவல்துறை இருப்பதையும் காண முடிகிறது. அதேபோல் அரசு ஆதரவு ஊடகங்கள் இந்த விவகாரத்தை மடைமாற்ற எடுத்டுக்கொண்ட முயற்சிகளும் அதிமுக செய்தி தொடர்பாளர்களால் முறியடிக்கப்பட்டதும் சமூக ஊடகங்களில் வெளியானது.
மாணவி தனது வாக்குமூலத்தில் எஃப்.ஐ.ஆரில் சொன்னது ஒன்றும் பேட்டியில் அதிகாரிகள் மாற்றி சொன்னதும் மேலும் பிரச்சனையை சிக்கலாக்கியது. யாரையோ காப்பாற்ற காவல்துறையும் அரசும் முயற்சிக்கிறது என்று சந்தேகப்பட்டு ஒருவர் மட்டுமே குற்றவாளி என ஆணையர் எப்படி கூறலாம் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது அரசு தரப்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என ஆணையர் சொன்னதை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டுவிட்டது என்று விளக்கம் தரப்பட்டாலும் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை என்பதை அதன் தீர்ப்பை பார்க்கும்போது புரிந்துக்கொள்ள முடிந்தது.
காவல் ஆணையர் பேட்டியளித்தது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம் அவரது விளக்கத்தை புறக்கணித்து அவர் மீது தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதேபோல் காவல் ஆணையருக்கு கீழ் உள்ள விசாரணையை ஏற்காமல் மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடக்கும் என்பதால் விசாரணை நேர்மையாக இருக்கும். அதேபோல் எஃப்.ஐ.ஆரில் போன் வந்தது என மாணவி கூறியதாக பதிவு செய்யப்பட்ட நிலையில் ஃபிளைட் மோடில் போட்டிருந்த ஞான சேகரன் மாணவியை பயமுறுத்த போன் செய்தது போல் நடந்தார் என அரசு தரப்பில் கூறியதும் முன்னுக்கு பின் முரணாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு உதவி...நேரில் சந்திக்க துடித்த விஜய்

இதனால் செல்போனை ஆய்வு செய்தால் நிச்சயம் அந்த சாரிடமிருந்து வந்த போன் கால் சிக்கும் அப்போது யார் அந்த சார் என்பது தெரிய வரும் என அதிமுக தரப்பில் தெரிவிக்கின்றனர். மேலும் வீடியோ எடுத்த ஞான சேகரன் அதை அடுத்து கைது செய்யப்படும் வரை யாருக்காவது அனுப்பியிருந்தால் அவர்களும் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள். இதுதவிர வாட்ஸ் ஆப் குரூப் ஏதாவது இதுபோன்ற ஆபாச செயல்பாடுகளுக்காக வைத்திருந்தால் அதில் உள்ளவர்களும் விசாரணை வளையத்துக்குள் வர வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது. 
ஆகவே சார் யார் என்பது விசாரணை வளையத்தில் பலர் கொண்டு வரப்படும்போது தானாக தெரிய வரும். தற்போதைக்கு ஞானசேகரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது செல்போன் வேறு ஏதேனும் லாப்டாப் போன்றவை இருந்தால் அதுவும் சோதனைக்கு உட்படுத்தப்படும்போது தானாக பல உண்மைகளை வெளிக்கொணர உதவும் ஆகவே ‘யார் அந்த சார்’ விவகாரத்தை அதிமுகவும் விடுவதாக இல்லை. இந்த விவகாரம் அரசுக்கு தலைவலியாக உள்ள நிலையில் விசாரணை முடிவில் மேலும் பல மர்மங்கள் விலகும் சொல்ல முடியாது யார் அந்த சார் மர்மம் கூட விலகலாம்.
இதையும் படிங்க: மாணவிக்கு நேர்ந்த கொடூரம் ..கைதானவர் திமுகவை சேர்ந்தவரா?..அமைச்சர் விளக்கம்