தமிழக அமைச்சரவையில் 7 மாதங்களுக்குப் பிறகு மனோ தங்கராஜ் மீண்டும் இடம் பிடிக்க உள்ளார்.
அமைச்சர் பதவி இழந்த பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் வகித்த துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
அமைச்சர்களின் இலாகா மாற்றம் மற்றும் துறை ஒதுக்கீடுகளுக்கான முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்துள்ளார். அதன்படி, போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வசம், மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக இருப்பார்.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் எஸ். முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் கலால் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் கலால் துறை அமைச்சராக இருப்பார். பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், கூடுதலாக வனங்கள் மற்றும் காதி துறைகளை கவனிக்க உள்ளார்.
மேலும், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ., டி.மனோ தங்கராஜை மீண்டும் அமைச்சரவையில் சேர்க்க முதல்வர் பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பரிந்துரையை ஆளுநர் அங்கீகரித்துள்ளார். இதன்படி புதிய அமைச்சரின் பதவியேற்பு விழா 28.4.2025 மாலை 6.00 மணிக்கு சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: மாநிலத்தில் சுயாட்சி! மத்தியில் கூட்டாட்சி...முதல்வர் போட்ட கணக்கு!

மனோ தங்கராஜ் 2021இல் அமைச்சரானபோது அவருக்கு தகவல் தொழில் நுட்பத் துறை ஒதுக்கப்பட்டது. பின்னர் 2023இல் அவருக்குப் பால் வளத் துறைக்கு மாற்றப்பட்டார். 2024 செப்டம்பர் 29 வரை அந்தப் பொறுப்பில் நீடித்த மனோ தங்கராஜ் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது மீண்டும் மனோ தங்கராஜ் தமிழக அமைச்சரவையில் இடம் பிடிக்க உள்ளார். அவருக்கு பால்வளத் துறை ஒதுக்கப்படுமா அல்லது மின்சாரத் துறை ஒதுக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட நாசர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டதை போல தற்போது மனோ தங்கராஜூம் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மிரட்டல் அரசியல் பிஜேபியோட டி.என்.ஏ.வில் ஊறிக் கிடக்குது..! கொதித்த கோவி.செழியன்..!