திமுக அமைச்சரவையில் அதிக முறை பந்தாடப்பட்ட அமைச்சர் என்கிற பெயரை ராஜ கண்ணப்பன் எடுத்துள்ளார்.
2021ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. தமிழகத்தின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சரவையில் அதிமுகவிலிருந்து வந்த 8 பேருக்கு இடம் அளிக்கப்பட்டது. அந்த வகையில் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜ கண்ணப்பனும் அமைச்சரவையில் இடம் பெற்றார்.

அவருக்கு அமைச்சரவையில் முக்கிய இலாக்காவான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டது. ஆனால், பதவியேற்ற சில மாதங்களிலேயே சேப்பாக்கம் போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் கட்டு கட்டாகப் பணம் சிக்கிய விவகாரத்தில் ராஜ கண்ணப்பன் பெயரும் அடிபட்டது. பின்னர் சிவகங்கையில் அரசு ஊழியரை மிரட்டிய விவகாரத்திலும் ராஜா கண்ணப்பன் பரபரப்பாக பேசப்பட்டார். இதனால் அவரிடம் இருந்த போக்குவரத்து துறை பறிக்கப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்ததால் அமைச்சர் பதவியை இழந்தார். அவரிடம் அப்போது இருந்த உயர்கல்வித்துறை கூடுதல் துறையாக ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டது அந்த துறையும் சிறிது காலம்தான் அவர் வசம் இருந்தது.

அமைச்சரவையில் கோவி செழியன் சேர்க்கப்பட்ட போது ராஜகண்ணப்பன் வசம் கூடுதலாக இருந்த உயர்கல்வித்துறை பறிக்கப்பட்டு செழியனுக்கு வழங்கப்பட்டது. அத்தோடு ராஜகண்ணப்பன் வசம் இருந்த பிற்படுத்தப்பட்ட நலத்துறை பறிக்கப்பட்டு அவர் பால்வளத்துறைக்கு மாற்றப்பட்டார்.
பால்வளத் துறை அமைச்சராக கடந்த ஏழு மாதங்களாக ராஜ கண்ணப்பன் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பொன்முடி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால் அவர் வசம் இருந்த வனத்துறை மற்றும் காதி தற்போது ராஜ கண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது இதன் மூலம் கடந்த நான்காண்டுகளில் திமுக அமைச்சரவையில் அதிக இலாகாக்களை மாறியவர் என்கிற பெயர் ராஜ கண்ணப்பனுக்கு கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: சூடுப்பிடிக்கும் அரசியல் களம்... மே.3 ஆம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்!!
இதையும் படிங்க: மங்குனி ஆட்சி நடத்திய இபிஎஸ் திமுக அமைச்சரவை மாற்றத்தை விமர்சிப்பதா.? ஆர்.எஸ். பாரதி பொளேர்.!