விருதுநகர் மாவட்டம் முக்குளம் அழகாபுரி கிராமத்தை சேர்ந்தவர் மலையரசன். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தனிப்படை காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பாண்டிச்செல்வி. வயது 33. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சமீபத்தில் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு டூவீலரில் மனைவியுடன் மலையரசன் திரும்பியபோது மானாமதுரை அருகே அடையாளம் வாகனம் ஒன்று மோதியதில் பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே இறந்தார். மனைவி இறந்த சோகத்தில் இருந்தார் மலையரசன். இதனால் சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில் விடுமுறையில் இருந்த மலையரசன், மார்ச் 18 ல் மதுரை ரிங் ரோடு ஈச்சனோடை பகுதியில் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பெருங்குடி போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்தனர். இதுதொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடந்தது. அடுத்தடுத்து மனைவி, கணவன் இறந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறி அவரது உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமரசம் பேசியதை தொடர்ந்து மலையரசன் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள் தத்தனேரி மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் அரங்கேறிய பயங்கரம்.. திமுக நிர்வாகி வெட்டி படுகொலை..

அங்கு காவலர் மலையரசன் உடல் 21 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது 8,10 வயது மகன்கள் கதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது. இந்நிலையில் மலையர்சன் மரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் இது கொலை என தெரியவந்தது. இந்த வழக்கில் ஆட்டோ டிரைவர் மூவேந்தரனை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் தொடர்ச்சியாக விசாரணை நடந்த்தப்பட்டது. அதன் ஒருபகுதியாக சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது ஆட்டோ டிரைவர் மூவேந்திரன் எஸ்.ஐ., மாரி கண்ணனை, புதர் பகுதியில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தைக் கொண்டு வெட்ட முயன்றுள்ளான்.

இதில் திருமங்கலம் தனி படை சார்பு ஆய்வாளர் மாரி கண்ணன் இடது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. போலீசார் அதிர்ச்சி அடைந்ததும், அதனை பயன்படுத்தி மூவேந்தர் அங்கிருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காவல்துறையினர் தற்காப்புக்காக மூவேந்தரின் வலது முழங்காலில் சுட்டு பிடித்துள்ளனர். மூவேந்தரும், காயம் அடைந்த காவலரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மதுரையில் கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் தப்ப முயற்சிக்கும்போது துப்பாக்கி சூடு நடத்தி போலீசார் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: மதுரை மத்திய சிறையில் மோசடி.. ரூ. 1.63 கோடி அளவுக்கு முறைகேடு.. 3 காவல் அதிகாரிகள் சஸ்பெண்ட்..!