ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு உத்தரவு பிறப்பித்தது.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானல் போக கட்டாயம் இபாஸ் வாங்கணும்.. இன்று முதல் திட்டம் அமல்..!
ஊட்டிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் கொடைக்கானலில் வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களையும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வாகன கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊட்டியில் நேற்று கடையடைப்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் வாகன கட்டுப்பாடு விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
அதில் எத்தனை வாகனங்களை அனுமதிக்கலாம் என்பது குறித்து ஐஐடி மற்றும் ஐஐஎம் ஆய்வு முடிவுகளுக்கு பிறகு நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் தற்போதைய வாகன கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மறு ஆய்வு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மே டூ ஜூன் மாதங்களில் இந்த தேதியைக் குறிச்சிக்கோங்க... மிஸ் பண்ணிடாதீங்க...!