காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதி சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டதை பாதுகாப்புப் படையினருக்கு ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. டெல்லியில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டுக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் காரணம் என்பதை மறைமுகமாக மத்திய அரசு ஒப்புக்கொண்டது.

வழக்கமாக பைசாரன் பள்ளத்தாக்குப்பகுதி, அமர்நாத் யாத்திரையின்போதுதான் திறக்கப்படும், அப்போது முன்கூட்டியே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படும். ஆனால், பாதுகாப்புப் படையினருக்கு தெரிவிக்காமல் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காஷ்மீர் முஸ்லீம் மக்கள் போராட்டம்.. காந்தி சொன்னது தான் இப்போவும் நடக்குது..! குலாம் நபி ஆசாத் விமர்சனம்..!

டெல்லியில் நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் உளவுத்துறையின் சிறப்பு இயக்குநர் அந்தஸ்தில் உள்ள ஓர் அதிகாரிக கட்சித் தலைவர்களிடம் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததைத் தெரிவித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் கூறுகையில் “பஹல்காம் பகுதியில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு கடந்த 20ம் தேதி எந்தவிதமான முன்அறிவிப்பும் இன்றி, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்காமல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த பள்ளத்தாக்குப்பகுதி வழக்கமாக ஜூன் மாதத்தில் தான் அமர்நாத் யாத்திரைக்காக திறக்கப்படும்.
கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் அந்தப் பகுதிக்குள் நுழைந்து சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியபோது அங்கு பாதுகாப்புப்படையினர் யாரும் இல்லை. ஏனென்றால், பைசாரன் பகுதி திறக்கப்பட்டது பாதுகாப்புப்படையினர் கவனத்துக்கு யாரும் கொண்டு செல்லவில்லை” எனத் தெரிவித்தார்.

அப்போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்புகையில் “அப்படியென்றால் பாதுகாப்பு குறைபாடு இருந்தது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா, அங்கு பாதுகாப்புப்படையினர் இல்லையா. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பைசாரன் பகுதிக்கு வந்தது பாதுகாப்புப்படையினருக்குத் தெரியாது என்று நீங்கள் கூறுகிறீர்களா. பைசாரன் பகுதி திறக்கப்பட்டது பாதுகாப்புப்படையினருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்கள்“ எனக் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசியவாதக் காங்கிரஸ் சரத்பவார் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே பேசுகையில் “புனேயில் உள்ள டிராவல் ஏஜென்ட் ஒருவர் பைசாரன் பள்ளதாக்கு திறந்துவிட்டதாகக் கூறுகிறார். புனேயில் இருக்கும் டிராவல் ஏஜென்ட்டுக்கு தெரிந்த தகவல் பாதுகாப்புப்படையினருக்குத் தெரியவில்லையா” எனக் கேட்டார்.

அதிகாரிகள் தரப்பில் தலைவர்களிடம் கூறுகையில் “பஹல்காம் பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், பைசாரன் பள்ளத்தாக்குப்பகுதிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்வார்கள் என்பதும், உள்ளூர் அதிகாரிகளுக்கு தெரியாது. ஹோட்டல் நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகத்தினர் சுற்றுலாப்பயணிகள் எங்கு செல்கிறார்கள் என்ற தகவல்களை பாதுகாப்புப்படையினரிடம் தெரிவிக்கவில்லை. சுற்றுலா ஏற்பாடு செய்பவர்கள் கூறும் தகவல்கள் அடிப்படையில்தான் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடரும் துப்பாக்கி சப்தம்.. எல்லையில் மீண்டும் வெடித்தது மோதல்.. பந்திபோராவில் பரபரப்பு..!