இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் உள்ள லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பு, இந்தக் கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா சோதனைச் சாவடி மூடல் முதலான முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து, சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான், சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து செயலை போர் தொடுத்ததாகவே கருதுவோம். சிந்து நதியின் கீழ் உரிமையைப் பெற எந்த விலையையும் கொடுப்போம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவுக்கான வான்பரப்பு மூடப்படுவதாக தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது.

மேலும் எல்லையில் இரு நாட்டு ராணுவமும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றமும் நிலவுகிறது. இரு நாடுகளும் அதிகபட்ச நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், மேற்காசிய நாடான ஈரான் இந்திய - பாகிஸ்தான் இடையே பதற்றத்தைத் தணிக்க ஈரான் உதவுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் சயீது அப்பாஸ் அராச்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு சொட்டுத் தண்ணீர் பாகிஸ்தானுக்கு கிடைக்காது.. தீயாய் வேலை செய்த அமித் ஷா.!

அதில், "இந்தியாவும், பாகிஸ்தானும் எங்கள் சகோதர நாடுகள். எங்கள் இடையே நுாற்றாண்டு பழமையான கலாச்சாரம் மற்றும் நாகரிக உறவுகள் உள்ளன. மற்ற நட்பு நாடுகளை போலவே இரு நாடுகளுக்கும நாங்கள் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிப்பதற்கு இரு நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்ய ஈரான் தயாராக உள்ளது." என்று அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்; பாதுகாப்பு படை வீரர்கள் எங்கே போனார்கள்? விளக்குகிறது மத்திய அரசு!!