ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் நேற்று பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உடனடியாக பஹல்காமில் ராணுவம் குவிக்கப்பட்டு, காயமடைந்தோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். பிற சுற்றுலா பயணிகளும் உடனடியாக ஸ்ரீநகருக்கு அழைத்து வரப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பயங்கரவாத சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பஹல்காம் சென்ற அமித் ஷா, பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை நேரில் ஆய்வு செய்தார். தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் நடந்தபோது சுற்றுலா பயணிகளை காப்பாற்ற குதிரைக்காரர் ஒருவர் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிர் இழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சுற்றுலா பயணிகளுக்காக குதிரை சவாரி நடத்தும் சையத் ஆதில் உசைன் ஷா என்பவர் ஒரு தீவிரவாதியிடம் சண்டையிட்டார்.
அவரிடம் இருந்து துப்பாக்கியை பறிக்க முயன்றார். அப்போது அந்த தீவிரவாதி ஷாவை சுட்டுக்கொன்றார். சுற்றுலா பயணிகளில் இந்துக்களை மட்டும் குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினர். அதை தட்டிக் கேட்டு துப்பாக்கியைப பறிக்க முயன்ற பஹல்காம் பகுதியைச் சேர்ந்த குதிரை சவாரி நடத்துநரும் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: தேசப்பணிக்கு தயார்..! எதுவும் எங்களை தடுக்காது.. ராணுவம், கடற்படை அறிவிப்பால் பதற்றம்!!

தன் உயிரை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகளின் உயிரை காக்க நினைத்த சையத் ஆதிலின் வீரத்தை மொத்த நாடே பாராட்டுகிறது. அவரது இறுதிச் சடங்கில் முதல்வர் ஒமர் அப்துல்லா உட்பட பல தலைவர்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். அவரை பறிகொடுத்து விட்டு பெற்றோர் நிலை குலைந்து போய் உள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவியை செய்து தருவதாக காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் உறுதியளித்துள்ளார். சையத் ஆதிலுக்கு 2 தங்கைகள். ஒருவர் பெயர் ரயீஷா. இன்னொருவர் பெயர் அஸ்மத். அண்ணனின் இறப்பு அவர்கள் இருவரையும் கலங்க செய்துள்ளது. அவரை பயங்கரவாதிகள் 3 முறை சுட்டுள்ளனர்.

என் அண்ணனை கொன்ற பயங்கரவாதிகளையும் சுட்டுக்கொல்ல வேண்டும் என கோபத்துடன் கூறினார் அஸ்மத். ரொம்ப பாசமான அண்ணன். உனக்கு என்ன வேணும் சொல்லு, வாங்கிட்டு வரேன்னு கேட்பான். இனி யாரு அந்த மாதிரி என்கிட்ட பாசமா இருப்பாங்கஎன கூறியபடி அழுதார் அஸ்மத். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது சையத் ஆதிலின் அப்பா போன் செய்துள்ளார்.
வீட்டுக்கு வரும்போது அரிசி வாங்கி வரும்படி சொல்வதற்காக போன் செய்தார். ஆனால், சையத் ஆதில் போனை எடுக்கவே இல்லை. சுற்றுலா பயணிகளை சவாரி ஏற்றிச் செல்வதில் பிசியாக இருப்பான் என நினைத்து விட்டு விட்டார். ஆனால், உண்மையில் பயங்கரவாதிகளின் குண்டுகளுக்கு சையத் ஆதில் இரையாகியிருந்தார்.
இதையும் படிங்க: இந்தியர்களை சீண்டினால்.. எதிரிகளுக்கு புரியும் மொழியில் பதிலடி இருக்கும்.. எச்சரிக்கும் யோகி..!