நானே நிறுவனர், நானே தலைவர் என ராமதாஸ் அறிவிக்க அன்புமணியின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகன் அன்புமணியிடம் இருந்த தலைவர் பதவியை பறித்து, அவரை அதிகாரம் இல்லாத செயல் தலைவராக நியமித்தார் ராமதாஸ். திண்டிவனம், தைலாபுரம் தோட்டத்தில் பேசிய ராமதாஸ், பா.ம.க., நிறுவனராகிய நான், இனி தலைவர் பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன் என்றும் பா.ம.க., தலைவராக இருக்கும் அன்புமணியை, கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்வதாகவும் தெரிவித்தார்.
ஏற்கெனவே, அன்புமணிக்கும் ராமதாசுக்கும் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில் ராமதாஸின் இந்த முடிவு பாமகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அன்புமணி ராமதாசுக்கு ஆதரவாக முதல் ஆளாக பா.ம.க. பொருளாளர் திலகபாமா குரல் கொடுத்தார். இதனையடுத்து ராமதாஸ் உடன் அவரது மகள்கள் காந்திமதி, கவிதா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிலையில் மருத்துவர் அய்யா அவர்களுக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன் என அன்புமணி பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பாட்டாளி சொந்தங்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுக்கும் அறிக்கை என கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன.
அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் கொண்டு, உங்களின் ஐயங்களைப் போக்கவே இந்த அறிக்கை என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அவர் முகத்துல கூட முழிக்கமாட்டேன்... அப்பாவை சந்திக்க மறுக்கும் மகன்; பாமகவில் உச்சக்கட்ட மோதல்!

கொள்கை விதிகளின் படி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரை கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய முடியும் என்றும் இதனை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் எனவும் தெரிவித்தார்.
எந்த நோக்கத்திற்காக கட்சியின் தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டேனோ, எந்த நோக்கத்திற்காக மருத்துவர் அய்யா அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கினாரோ, அந்த நோக்கத்தை நோக்கி உங்களின் ஆதரவுடன் இன்னும் தீவிரமாக பயணிக்க நான் உறுதி பூண்டிருக்கிறேன் என கூறியுள்ளார்.

2026 சட்டப்பேரவை தேர்தலைப் பொறுத்தவரை பாட்டாளி சொந்தங்கள் விரும்பும் வலிமையான கூட்டணியை மருத்துவர் அய்யா வழிகாட்டுதலுடன் அமைக்க வேண்டியது தனது பெரும் கடமை என தெரிவித்த அன்புமணி, அந்தக் கடமையை சரியான நேரத்தில் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் செய்து முடிப்போம் என உறுதிப்பட கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்… என்ற முறையில் அது தான் என் தலையாய பணி எனவும் தெரிவித்தார்.
மீண்டும் சொல்கிறேன்... அரசியல் களத்தில் மருத்துவர் அய்யா அவர்களின் லட்சியங்களை வென்றெடுப்பதும், அவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்திச் செல்வதும் எனது முழு முதல் கடமை., அதற்காக உங்களை சந்திக்க விரைவில் தேடி வருவேன் என கூறினார்.
இதையும் படிங்க: பாமகவிடம் கையெழுத்து கேட்ட பாஜக… அப்பாவை அடியோடு தூக்கிடணும்… கங்கணம் கட்டிய அன்புமணி..!