பஹல்காம் தாக்குதல் குறித்து ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22இல் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாதிகள் இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியதால், இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக தூதரக நடவடிக்கைகள் ரத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாஹா எல்லை மூடல் உள்பட ஐந்து முக்கிய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

இதன் தொடர்ச்சியாக ஐஎன்எஸ் விக்ராந்த் மூலம் அரபிக் கடலில் இருந்தவாறு இந்தியா ஏவுகணை சோதனையை நடத்தியது.
மேலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து தற்போதைய நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர். இந்நிலையில் பாகிஸ்தான் மீதான நடவடிக்கை தொடர்பாகவும் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும் ஜி 20 நாடுகளின் தூதர்களை இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் அழைத்து ஆதரவு திரட்டியுள்ளது.

கனடா, ஜெர்மனி, ஜப்பான், போலந்து, இங்கிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளின் தூதர்கள் வெளியுறவுத் துறை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். இது நாள் வரை பாகிஸ்தானுடன் நட்பு நாடாக இருக்கும் சீனத் தூதரக அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்துக்கு வந்தனர். வெளி நாட்டு தூதர்களிடம் சுமார் 30 நிமிடங்கள் இந்திய அதிகாரிகள் பேசினர். அப்போது காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
முன்னதாக காஷ்மீர் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யா அதிபர் புதின், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதையும் படிங்க: காஷ்மீர் மக்களை எதிரிகளாகப் பார்க்காதீர்கள்.. காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உருக்கமான வேண்டுகோள்.!
இதையும் படிங்க: நீரின்றி பாகிஸ்தானியர்கள் செத்து மடிவார்கள்.. இதுதான் 56 இன்ச் பதிலடி.. துள்ளிக் குதிக்கும் பாஜக எம்.பி..!