காஷ்மீர் மக்களை எதிரிகளாக கருத வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீரில் பஹல்காமில் நடைபெற்ற கொடூரமாக தீவிரவாதிகளின் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிராகப் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "விடுமுறையைக் கழிக்க இங்கு வந்த 25 விருந்தினர்களானாலும் சரி, அவர்களின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரைத் தியாகம் செய்த இப்பள்ளத்தாக்கைச் சேர்ந்தவராக இருந்தாலும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு எனது பொறுப்புணர்வை தெரிவிக்க விரும்புகிறேன். தாக்குதல் சம்பவத்துக்குப் பின்பு தெருவில் வந்து அதனைக் கண்டித்த காஷ்மீர் மக்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவிக்கிறேன்.

இச்சம்பவத்தைக் கண்டித்து குரல் கொடுத்த காஷ்மீர் மக்கள், இதன் மூலம் சொல்ல விரும்பியது, இந்தத் தாக்குதலில் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது அவர்களுக்காக நடத்தப்பட்டது இல்லை என்பதைத்தான். இந்நேரத்தில் நாட்டு மக்களிடம் நான் ஒரு விஷயத்தைக் கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் மக்களை உங்களின் எதிரிகளாக கருத வேண்டாம். நாங்கள் குற்றாவளிகள் இல்லை. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்களும் தீவிரவாதத்தால் துன்பப்பட்டு வருகிறோம். எனவே தயவுசெய்து அதுபோன்று பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகிறோம்.
இதையும் படிங்க: நீரின்றி பாகிஸ்தானியர்கள் செத்து மடிவார்கள்.. இதுதான் 56 இன்ச் பதிலடி.. துள்ளிக் குதிக்கும் பாஜக எம்.பி..!

காஷ்மீர் மக்கள் அமைதிக்கு எதிரானவர்கள் இல்லை. அவர்கள் அமைதியைத்தான் விரும்புகிறவர்கள். நடந்தவை எல்லாம் எங்களின் விருப்பத்துக்கு எதிரானவை. இவ்வாறு நடக்கக் கூடாது என்பதே எங்களின் விருப்பம். நடந்த சம்பவம் துரதிருஷ்டமானது" என்று உமர் அப்துல்லா தெரிவித்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன் பின்பு நடந்த மிகவும் கொடூரமான தாக்குதலாக பஹல்காம் சம்பவம் அமைந்துள்ளது.
இதையும் படிங்க: மிகப்பெரிய பதிலடிக்கு தயாராகும் இந்தியா..? இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்..!