காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 சுற்றுலா பயணிகள் இறந்தனர. தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கு எட்டாத வகையில் கடுமையான தண்டனை வழங்கப்படும் என பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு, கண்காணிப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அக்ரன் என்ற பெயரில் இந்திய விமானப் படை சிறப்பு போர் ஒத்திகையை நடத்தி வருகிறது. இதில் ரபேல் போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் இருந்து அண்மையில் பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் பெருமளவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.

இப்போது என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையும் களத்தில் இறங்கி சோதனை நடத்தி வருகிறது. காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை நாடு திரும்பவும், இங்குள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டது.
தூதரக பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டு விசா சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் ஒரு வாரத்திற்குள் இங்கிருந்து வெளியேறும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல், பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்களும் தகுந்த ஆவணங்களை காட்டி, உடனே நாடு திரும்பும் படி கேட்டுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: இயல்பு நிலை திரும்பியது.. மெல்ல மெல்ல மீளும் பஹல்காம்.. மீண்டும் துளிர்விடும் சுற்றுலா..!

இதையடுத்து, பல்வேறு காரணங்களுக்காக நம் நாட்டின் பல பகுதிகளுக்கு வந்த பாகிஸ்தானியர்கள் அவசர அவசரமாக அடாரி எல்லையை கடந்து அந்நாட்டிற்கு செல்கின்றனர். அதே போல், அங்கிருந்தும் நம் நாட்டினர் இங்கு வருகின்றனர். பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் மத்திய அரசின் உத்தரவை, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி உள்ளது. மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியா வந்துள்ள பாகிஸ்தானியர்கள் விசாக்கள் செவ்வாய் வரை செல்லுபடியாகும். பாகிஸ்தானுக்குள் செல்ல பஞ்சாப் வாகா-அட்டாரி எல்லைக்கு ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் டில்லியில் வசிக்கும் 5 ஆயிரம் பாகிஸ்தானியர்களின் பெயர் பட்டியலை உளவுத்துறை டில்லி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது. அவர்களை இந்தியாவில் இருந்து நாடு கடத்தும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. பாகிஸ்தானியர்களை இந்தியா விட்டு வெளியேற்ற மத்திய அரசு விதித்த கெடு இன்றுடன் நிறைவு பெறுவதால் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: 2 நாளில் 9 பயங்கரவாதிகள் வீடு இடிப்பு.. 14 பேர் யார்? பெயர் பட்டியல் வெளியீடு..!