அமெரிக்க அதிபராக டிரம்ப பதவியேற்ற நாள் முதல் அவர் எடுத்த அதிரடி முடிவுகளால் பல நாடுகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வரி விவகாரத்தில் அவரது முடிவு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. இதற்கிடையே டிரம்ப் நிர்வாகம் இப்போது கூடுதல் வரிகளை அறிவித்துள்ளது. அதன்படிதென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சோலர் மின் உற்பத்திப் பொருட்களுக்கு 3,521% சதவீதம் வரை புதிய வரிகளை விதித்துள்ளது.
கடந்த 21 ஆம் தேதி இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மேலும் அதில், கம்போடியா, வியட்நாம், மலேசியா மற்றும் தாய்லாந்து நாடுகளின் உள்ள சோலார் மின் உற்பத்தி நிறுவனங்கள், சீனாவின் மானியங்களால் நியாயமற்ற முறையில் பயனடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அவர்கள் மலிவான பொருட்களை அமெரிக்கச் சந்தைக்கு அனுப்பி வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே வரிகளை அறிவித்துள்ளதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்னதாக அதிபர் டிரம்ப் முதல்முறை (2016-2020) அதிபராக இருந்தபோதே சீனா மீது வர்த்தகப் போரை நடத்தி, வரிகளை அறிவித்திருந்தார்.
இதனால் அப்போதே பல சீன நிறுவனங்கள் அமெரிக்க வரியில் இருந்து தப்பிக்கத் தென்கிழக்கு ஆசியா நாடுகளில் முதலீடு செய்தன. அதாவது இந்தப் பொருட்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து வந்தாலும், இதன் மூலம் லாபமடைவது சீன நிறுவனங்களாகவே இருந்து வந்தது. அதைக் கண்டுபிடித்தே இப்போது வரி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கம்போடியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சோலார் பொருட்களுக்கு 3,521 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ட்ரம்ப் வரியால் பீதி..! 600 டன் ‘ஐ-போனை’ இந்தியாவிலிருந்து அமெரிக்கா கொண்டு செல்லும் ‘ஆப்பிள்’ நிறுவனம்..!

சீன நிறுவனங்களின் முதலீடு குறித்த அமெரிக்காவின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர கம்போடியா மறுத்துவிட்டது. இதன் காரணமாகவே கம்போடியாவுக்கு அதிகபட்ச வரி விதிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் வியட்நாமில் உள்ள நிறுவனங்களுக்கு 395.9 சதவீதம் வரை வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தில் உள்ள நிறுவனங்களுக்கு 375.2 சதவீத வரிகளும், மலேசியாவில் உள்ள நிறுவனங்களுக்கு 34.4 சதவீத வரிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு மட்டும் வியட்நாம், தாய்லாந்து, கம்போடியா மற்றும் மலேசியாவிலிருந்து $12.9 பில்லியன் மதிப்புள்ள சோலார் மின்சார உபகரணங்களை அமெரிக்கா இறக்குமதி செய்திருந்தது. ஆனால், இப்போது டிரம்ப் தரப்பு இஷ்டத்திற்கு வரிகளை அறிவித்துள்ளதால் இந்த இறக்குமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

அமெரிக்காவின் டாப் சோலார் நிறுவனங்கள் இணைந்து பைடன் நிர்வாகத்திடம் இது குறித்து முறையிட்ட நிலையில், கடந்த ஆண்டு பைடன் நிர்வாகம் இந்த விஷயத்தில் விசாரணையைத் தொடங்கியது. ஓராண்டு நடந்த தீவிர விசாரணைக்கு பிறகே டிரம்ப் நிர்வாகம் இப்போது வரிகளை அறிவித்துள்ளது.
மறுபுறம் டிரம்ப் 90 நாட்கள் ரெசிப்ரோக்கல் வரியை நிறுத்திவைத்திருக்கும் நிலையில், அதற்குள் அமெரிக்கா உடன் வர்த்தக ஒப்பந்தத்தைப் போட உலக நாடுகள் முயன்று வருகிறது. குறிப்பாக இந்தியா அது தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் சில வாரங்களில் இந்தியா உடனான ஒப்பந்தத்தை அமெரிக்கா இறுதி செய்யும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: அடங்கிப்போறவன்னு நினைச்சிட்டியா..? 50% கூடுதல் வரி... சீனாவை மிரட்டும் டிரம்ப்..!