ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து, பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் என முக்கிய பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் அடுத்தடுத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதன் எதிரொலியாக பாக்., உடனான துாதரக உறவு துண்டிப்பு, சிந்து நதி நீர் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து என அடுத்தடுத்த உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பித்து வருகிறது. ராணுவ தளபதி திவேதி ஸ்ரீநகர் சென்று கள நிலவரம் குறித்து ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

கவர்னரை சின்ஹாவை சந்தித்த தளபதி, அடுத்த கட்ட நடவடிக்கைக்கு ராணுவம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் மீதான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஜனாதிபதி முர்முவிடம் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டவருக்கான அனைத்து வகை விசாக்களையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளதை அடுத்து, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் இம்மாத இறுதிக்குள் தங்கள் நாட்டிற்கு திரும்பும் படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒருத்தனும் மிஞ்ச கூடாது.. தேடித்தேடி அழிக்கும் ராணுவம்.. நேற்றும் 3 பயங்கரவாதிகள் வீடு தகர்ப்பு..!

இதனிடையே தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகளை ராணுவத்தினர் வலை வீசி தேடி வருகின்றனர். இந்நிலையில், பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய 2 பேரைக் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். பயங்கரவாதிகளுக்கு உதவிய மேலும் 2 பேரின் வீடுகளை ராணுவம் இடித்து தகர்த்தது. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக, சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தளபதி உட்பட 5 பேரின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தள்ளினர்.

அந்த வகையில், ஷோபியனின் சோட்டிபோரா கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு கமாண்டர் ஷாஹித் வீடு இடிக்கப்பட்டன. ஏற்கனவே, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசேன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களில், தோகர், அனந்த்நாக் மாவட்டம்; ஷேக், புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு இந்தியா தரப்பில் உடனடி பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. நள்ளிரவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்புகள் இல்லை என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பைசாரன் பள்ளத்தாக்கு திறக்கப்பட்டதை பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கவில்லை.. அரசு ஒப்புதல்..!