போபால் நகரில் நேற்று வீராங்கனா ராணி அவந்திபாய் லோதி சிலை திறப்பு விழா நடந்தது. இதில் மாநில பஞ்சாயத்து மற்றும் கிராம மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரஹலாத் படேல் பங்கேற்றார். அவர் வரும்போது அவரைச் சந்திக்க வந்த தொண்டர்கள், பொதுமக்கள் பலர் மனுக்களை அவரிடம் கொடுத்தனர். அதன்பின் நிழ்ச்சியில் அமைச்சர் பிரஹலாத் படேல் பேசியதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் பேசியதாவது,
அரசாங்கத்திடமிருந்தே அனைத்தையும் பிச்சையெடுத்து வாங்க வேண்டும் என்ற எண்ணம், பழக்கம் மக்களுக்கு அதிகமாகிவிட்டது. யாரேனும் தலைவர்கள் வந்தால், அவர்கள் கையில் கூடைநிறைய மனுக்களை கொடுத்துவிடுவது, மேடையில் அமர்ந்தாலும் மனுக்களை கொடுப்பது. இது நல்ல பழக்கம் அல்ல.

கேட்டு வாங்கிற மனநிலை மாறி, கொடுக்கும் மனநிலை வளர வேண்டும். இந்த மனநிலை நிச்சயம் ஒருநாள் உங்களை மகிழ்ச்சியாக வாழ வைக்கும், சமூகத்தின் வளர்ச்சிக்கும் நல்லது. இலவசங்களை அதிகமாக எதிர்பார்த்து, இலவசங்கள் கொடுத்து சமூகம் வலிமையடைந்ததற்குப் பதிலாக பலவீனமடைந்துவிட்டது. துணிச்சலான பெண்ணின் அடையாளம் இலவசங்களை வாங்குவது அல்ல, வீரத்தியாகி வாழ்ந்த வாழ்க்கையால் மதிக்கப்படுகிறார். வீரத்தியாகி யாரேனும் ஒருவர் பிச்சையெடுத்து பார்த்துள்ளீர்களா, கேள்விப்பட்டதுண்டா. அவ்வாறு இருந்தால் என்னிடம் கூறுங்கள், இவ்வாறு அமைச்சர் பிரஹலாத் படேல் தெரிவித்தார். பாஜக மூத்த தலைவர் பிரஹலாத் படேல் பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி, மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மோடியின் அடுத்த ஆட்டம் பாம்..! இந்தியாவுடன் இணைகிறது பாக்.காஷ்மீர்..

காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜீது பத்வாரி கூறுகையில் “இலவசங்களை வாங்கும் மக்களை பிச்சையெடுப்பது எனக் கூறுவது மக்களை அவமானப்படுத்துவது போலாகும். அது பாஜகவின் அகங்காரம் உச்சத்துக்கு வந்துவிட்டதை காட்டுகிறது, பொதுமக்களை பிச்சைக்கார்கள் என்று பேசுவது தவறு. நம்பிக்கையுடனும், கண்ணீருடன் அரசாங்கத்திடம் உதவிக்காக காத்திருக்கும் மக்களை அவமானப்படுத்தும் வார்த்தை. தேர்தலுக்கு முன் பொய்யான வாக்குறுதிகளை அளித்துவிட்டு, இப்போது தேர்தல் முடிந்தபின் அதை நிறைவேற்ற பாஜக மறுக்கிறது. மக்கள் அவர்களுக்கு விரைவில் நினைவூட்டுவார்கள், தேர்தல் வரட்டும் பாஜக தலைவர்கள் வாக்குகளைப் பிச்சை எடுக்க வருவார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இனி வாக்கு சீட்டுனு வாய தொறக்காத..! நாடாளுமன்ற குழுவிடம் மத்திய சட்ட அமைச்சகம் கறார்