நான் வழக்கிற்கு பயந்து எங்கும் ஓடிஒளியவில்லை, தலைமறைவாக வேண்டிய அவசியமும் இல்லை, இன்று மாலை காவல் நிலையத்தில் ஆஜராவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.

தருமபுரியில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், என் மீதான வழக்கில் மட்டும் காவல்துறை இவ்வளவு அக்கறை காட்டுவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். நீதிமன்றம் மூன்று மாதம் அவகாசம் அளித்துள்ள போதிலும் 3 நாளில் வழக்கை முடிப்பது போல் காவல்துறையினர் நடந்து கொள்வதாக சீமான் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: சம்மனை கிழிக்கச் சொன்னதே நான் தான்... முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்..! - கயல்விழி

வீட்டில் ஆள் இல்லாவிட்டால் தான் சம்மனை கதவில் ஒட்ட வேண்டும் என்று விதி உள்ளது. வீட்டில் என்னுடைய மனைவி இருக்கும்போது கதவில் ஒட்ட வேண்டிய அவசியம் என்ன வந்தது? சம்மன் நான் படிக்கவா? அல்லது தெருவில் போகிறவர்கள் படிக்கவா?. அப்படியானால் அதனை கிழிக்காமல் பூஜை அறையில் வைத்து கும்பிடுவார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார். ஒட்டியதோடு அவர்கள் வேலை முடிந்துவிட்டது. அதனை நாங்கள் என்ன வேண்டுமானால் செய்யலாம்.. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 4 சம்மன்கள் எதற்காக?

அதுமட்டுமல்ல எங்கள் வீட்டு பாதுகாவலரை போலீசார் ஏன் அடித்து துன்புறுத்தி ஒரு குற்றவாளியைப் போல இழுத்துச் செல்ல வேண்டும். நீலாங்கரை காவல் ஆய்வாளர் ஒரு கட்சிக்காரரைப் போல நடந்து கொண்டுள்ளார் என்றும் சீமான் கூறினார்.
நான் எங்கும் ஓடிஒளியவில்லை. தலைமறைவாகவில்லை. இன்று மாலை 6 மணிக்கு வளசரவாக்கம் காவல்நிலையம் செல்வேன் என்று சீமான் தெரிவித்தார்.
சீமானின் வருகையையொட்டி வளசரவாக்கம் காவல்நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீமான் வீட்டில் போலீஸாருக்கு காத்திருக்கும் ஷாக்… கயல்விழியின் செம ஐடியா..!