திருப்பூரில் ப்ரிண்ட் செய்யப்பட்ட ஒரு டி-ஷர்ட் என்ன செய்து விட முடியும்.. நாடாளுமன்றத்தை நடைபெற விடாமல் தடுத்து விட முடியும் என்று காட்டியிருக்கிறது. என்ன புரியவில்லையா? முழுமையாக படியுங்கள்...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய தினம் அவை கூடியபோது மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும், மாநிலங்களவைத் தலைவர் ஜெக்தீப் தன்கரும் ஒருகணம் அதிர்ச்சிக்குள்ளானார்கள். காரணம், சில வாசகங்கள் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டுடன் தமிழக எம்.பி.க்கள் அவைக்கு வந்திருந்தனர். நாடாளுமன்ற அவை மரபுகளின் படி குறிப்பிட்ட சில ஆடைகளுடன் அவைக்குள் உறுப்பினர்கள் வரவேண்டும். அதனைமீறும் வகையில் தமிழக எம்.பி.க்கள் வந்திருந்ததாக கூறி முதல் ஒருமணி நேரத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இதையும் படிங்க: எனக்குப் பயமா..? நாடாளுமன்றத்தில் கொதித்தெழுந்த அமித் ஷா..!

அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் திரண்ட தமிழக எம்.பி.க்கள் தொகுதி மறுசீரமைப்புக் குறித்து வெளிப்படைத்தன்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும் என்று முழக்கங்கள் எழுப்பினர். அவர்கள் அணிந்திருந்த பனியனில் தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும் என ஆங்கிலத்தில் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.
மேலும் uncivilized என்று பொறிக்கப்பட்ட மேல்துண்டும் அனைவரும் அணிந்திருந்தனர். இதில் un என்ற எழுத்துக்களின் மீது x குறி போடப்பட்டிருந்தது. கடந்தவாரம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக எம்பிக்களைப் பார்த்து uncivilized என்று கூறியிருந்தார். தமிழக முதலமைச்சர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். இதன்பின்னர் தான் கூறிய சொற்களுக்கு தர்மேந்திர பிரதான் மன்னிப்புக் கோரி இருந்தார். அதனை நினைவுபடுத்தும் வகையிலும் தமிழக எம்.பி.க்கள் இன்றைய தினம் ஆடை அணிந்து சென்றிருந்தனர்.

இதன்பின்னர் அவை கூடியபிறகு எதற்காக வாசகங்கள் எழுதப்பட்ட டி-ஷர்ட்டுகளின் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்கிறீர்கள் என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கேள்வி எழுப்பினார். அப்போது தொகுதி மறுசீரமைப்புப் பற்றி பேச வேண்டும் என தமிழக எம்.பி.க்கள் பதிலளித்தனர். இதற்கு அனுமதி தர ஓம் பிர்லா மறுக்க, தமிழக எம்.பி.க்கள் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் மக்களவையும், மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது.

நடப்புக் கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.க்கள் தங்கள் கேள்விகளாலும், வித்தியாசமான அணுகுமுறையாலும் நாடாளுமன்றத்தை திணற அடித்து வருகின்றனர். குறிப்பாக நேற்றைய தினம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மொழி அரசியல் குறித்து பேசி நாடாளுமன்றத்தையே திகைக்க வைத்தார். இத்தனை வயதில் இப்படி ஒரு பேச்சா என அனைவரும் வியந்து போயினர்.
இதையும் படிங்க: பொருளாதார பாதிப்புகள் பற்றி பார்லிமென்டில் விவாதிக்க வேண்டும்.. தீர்மானத்தை முன்மொழிந்த விஜய் வசந்த்!