பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை நியமனம் செய்யும் குழு தொடர்பாகவே தமிழ்நாடு அரசுக்கும், ஆளுர் ஆர்.என்.ரவிக்கும் கடந்த சில மாதங்களாக கடுமையான பனிப்போர் நடைபெற்று வருகிறது. அதற்கு ஏற்றார்போல் பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்ட வரைவு விதிகளில் கூட துணைவேந்தரை நியமனம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கூடுதலாக வழங்கப்பட்டதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், மாதவரத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக செயல்பட்டு வந்த கே.என்.செல்வராஜின் பதவிக்காலம் வருகிற ஏப்ரலோடு முடிகிறது. கடந்த 2021-ம் ஆண்டு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட அவரது பதவிக்காலம் கடந்த வருடமே முடிந்தநிலையில் ஒருவருட நீட்டிப்பில் தான் அவர் இருந்து வந்தார். மீண்டும் பணிநீட்டிப்பு செய்ய முடியாத நிலையில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான நெருக்கடி எழுந்தது.
இதையும் படிங்க: அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.. "பாரத் மாதா கி ஜே" என வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு..

துணைவேந்தரை தேர்வு செய்வதற்கு முதலில் மூவர் குழு ஒன்று நியமிக்கப்படும். ஆளுநரின் பிரதிநிதி ஒருவர், அரசின் பிரதிநிதி ஒருவர், பல்கலைக்கழகத்தின் பிரதிநிதி ஒருவர் என இந்த மூவரும் இணைந்து 3 பேரை தேர்வு செய்வார்கள். அவர்களில் ஒருவரைத் தான் துணைவேந்தராக ஆளுநர் தேர்வு செய்வார் என்பதே நடைமுறை. அந்தவகையில் அந்த மூவர் குழுவிற்கான அறிவிப்பைத் தான் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அதில் ஆளுநரின் பிரதிநிதியாக, தேசியக் கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக கழகத்தின் துணைவேந்தரும், பல்கலைக்கழக மானியக்குழு உறுப்பினருமான சசிகலா வஞ்சாரி இடம்பெற்றுள்ளார். அரசின் பிரதிநிதியாக, பல்கலைக்கழகத்தின் சிகிச்சையியல் இயக்குனரகத்தின் முன்னாள் இயக்குநர் தனபாலன் இடம்பிடித்துள்ளார். பல்கலைக்கழக பிரதிநிதியாக பேராசிரியர்கள் ராபின்சன், ஆப்ரஹாம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். குழுவின் ஒருங்கிணைப்பாளராக சசிகலா வஞ்சாரி செயல்படுவார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு தமிழக அரசின் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மூவர் அணி இணைந்து தகுதியான மூன்று பேரை தேர்ந்தெடுத்து ஆளுநருக்கு அனுப்புவார்கள். அவர்களில் ஒருவரை ஆளுநர் இறுதி செய்து துணைவேந்தராக நியமிப்பார். இந்த நடைமுறைக்குள் என்னென்ன அரசியல் சிக்கல்கள் வரப்போகிறது என்பதை இனிவரும் நாட்கள் தான் சொல்லும்..
இதையும் படிங்க: 'மினி இந்தியா'-வாக மாறுகிறது டெல்லி... பாஜக போட்ட பக்கா ப்ளான்..!