“ எந்த உள்நோக்கமும் இன்றி தவறுதலாக் பேசிவிட்டேன்” என்று மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி ஷிவ்நாத் துக்ரல் மன்னிப்புக் கோரியுள்ளார்.
கடந்த 10ம் தேதி மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜூகர்பெர்க் ஒரு பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில் “ கொரோனா பெருந்தொற்று உலகம்முழுவதும் ஆளும் கட்சிகள், அரசுகள் மீதான நம்பிக்கையை குலைத்துவிட்டது. 2024ம் ஆண்டு உலகில் பல நாடுகளில் முக்கியமான தேர்தல்கள் நடந்தன. இந்தியாவிலும் தேர்தல் நடந்தது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் ஆளும் கட்சிகள் தோல்வி அடைந்தன. உலகளவில் அதற்கு பணவீக்கம், பொருளாதாரக் கொள்கைகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக கையாளாமை,இதுதான் தோல்விக்கு காரணமாக இருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

மார்க் ஜூகர்பெர்க் கருத்துக்கு மத்திய ஒலிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கண்டனம் தெரிவித்திருந்தார். அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ இந்திய மக்கள் நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு மீது வைத்திருந்த நம்பிக்கையைத்தான் கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் வெளிப்படுத்தியது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா 2024 தேர்தலை 64 கோடி வாக்காளர்களுடன் நடத்தியது. ஆளும் கட்சிகள், குறிப்பாக இந்தியாவில் நடந்த தேர்தலில் ஆளும் கட்சி தோற்றது, கொரோனா தொற்றை சரியாக தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று ஜூகர்பெர்க் பேசியது தவறு. 80 கோடி மக்களுக்கு இலவச உணவு, 220 கோடி இலவச தடுப்பூசிகள், உலகின் பல நாடுகளுக்கு தடுப்பூசி அளித்து உதவி என இந்தியா வழிகாட்டியது, வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட தேசமாக இந்தியா இருக்கிறது, 3 முறையாக தேர்தலில் வென்று மோடியின் அரசு மக்கள் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. மார்க் ஜூகர்பெர்க் தவறானதகவல்களை வழங்கியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பாஜக எம்.பியும், நாடாளுமன்றத்தின் தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப நிலைக்குழுவின் தலைவருமா நிஷிகாந்த் துபே நேற்று எக்ஸ் தளத்தில் ஒரு கருத்துப் பதிவிட்டிருந்தார். அதில் “ மெட்டா நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் இந்தியா குறித்து தவறான தகவல்களை தெரிவித்தமைக்கு அவருக்கு சம்மன் அனுப்ப இருக்கிறோம். தவறான தகவல்கள் ஜனநாயக நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்திவிடும். ஜூகர்பெர்க் நாடாளுமன்றத்திலும், மக்களிடமும் மன்னிப்புக் கோர வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: இந்தியா கூட்டணியை அழிக்கிறதா காங்கிரஸ்?

இந்நிலையில் மெட்டா நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி ஷிவ்நாத் துக்ரல் இன்று தனது எக்ஸ் தளத்தில் மத்திய அரசிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். அவர் பதிவிட்ட கருத்தில் “ அன்புக்குரிய மரியாதைக்குரிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். ஜூகர்பெர்க் பேசிய கருத்தான, பல நாடுகளில் ஆளும் கட்சியில், ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது உண்மைதான், ஆனால், இந்தியாவில் இல்லை. எந்த உள்நோக்கமும் இன்றி தவறுதலாகப் பேசியதற்கு நாங்கள் மன்னிப்புக் கோர விரும்புகிறோம். மெட்டா நிறுவனத்துக்கு இந்தியா முக்கியமான தேசம், புதிய எதிர்காலத்தை நாங்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்குகிறோம்” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு செக் வைத்த அமலாக்கத்துறை... 22-ந் தேதி நேரில் ஆஜராக உத்தரவு...