பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கு தொடர்பாக 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, கொலை சம்பவம் நடந்த ஒரு மாதத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய மாநில தலைவராக ஆனந்தனும், மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் பொற்கொடி கட்சியின் தலைவர் போன்று செயல்படுவதாகவும், கட்சியில் தன்னை முன்னிறுத்தியே அரசியல் செய்வதாகவும் ஆனந்தன் தேசிய தலைமைக்கு ஏற்கெனவே புகார் அளித்திருந்தார்.

அதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு நடைபெற்ற பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழு கூட்டத்திற்கு பொற்கொடி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்த கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்ஜீ கவுதம் மற்றும் முன்னாள் எம்.பி. ராஜாராம் ஆகியோரை பொற்கொடி தலைமையிலான 500க்கும் மேற்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் நேரில் சந்தித்தனர்.
இதையும் படிங்க: உச்சக்கட்ட உட்கட்சி பூசல்; ஆம்ஸ்ட்ராங் மனைவி கட்சி பதவி பறிப்பு - பகுஜன் சமாஜ் அதிரடி..!
அப்போது, மாநில தலைவராக உள்ள ஆனந்தன் தங்களுக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக பொற்கொடி புகார் அளித்தார். இதனால் இருதரப்புக்கும் இடையே அப்போது மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பகுஜன் சமாஜ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலை உறுதிப்படுத்திய நிலையில், இதுகுறித்த தகவல் மாயாவதி வரை தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பொற்கொடியை பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து தலைமை அறிவித்தது.

அந்த அறிக்கையில், “நமது தேசியத் தலைவர் மாயாவதியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் மத்திய ஆளும் கட்சியாக மாறுவதற்கான தனது தீர்மானத்தை பகுஜன் சமாஜ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில், மாநிலத் தலைவர் பி.ஆனந்தனின் வழிகாட்டுதலின் கீழ் கட்சி தொடர்ந்து வளர்ந்து வலுவடையும்.
தேசிய தலைவரின் உத்தரவின்படி, பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தனது குடும்பத்தினர் மற்றும் மறைந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதில் மட்டுமே இனி கவனம் செலுத்துவார். அவர் கட்சி விஷயங்களில் ஈடுபட மாட்டார். ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் தனது கட்சிப் பணிகளைத் தொடர்வார். மேலும் பகுஜன் சமாஜ் கட்சி ஆம்ஸ்ட்ராங் குடும்பத்திற்கு தமது அசைக்க முடியாத ஆதரவை தொடர்ந்து வழங்கும்” என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனால் தனிக்கொடி தூக்க முடிவெடுத்து இருக்கிறார் பொற்கொடி. விரைவில் அவர் ஒரு தனிக்கட்சி தொடங்க உள்ளதாககவல் வெளியாகி இருக்கிறது. அந்தக் கட்சிக்கு ஆம்ஸ்ட்ராங் சோசியல் பார்ட்டி என பெயரிடவும் திட்டமிட்டுள்ளார். கட்சியைத் தொடங்க தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தை முடித்து இருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள் பொற்கொடிக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வழக்கறிஞர்கள் குழுவை உருவாக்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது, ஒப்புதல்கள், தரவு கடிதம் பெறுவது உள்ளிட்ட சட்டப்பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் நினைவிடம் நோக்கி நடைபயணம்.. அனுமதி கோரிய மனு மீது பதிலளிக்க ஆவடி கமிஷனருக்கு உத்தரவு..!