ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பிரபலமான சுற்றுலா தலம் பைசரான் பள்ளத்தாக்கு. பஹல்காமில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதிக்கு நடந்தும், குதிரை சவாரி மூலமும் மட்டுமே செல்ல முடியும். கோடை சீசன் துவங்கியதை அடுத்து, இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
நேற்று இங்கு மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் புல்வெளி பகுதியில் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென ராணுவ வீரர்களை போல சீருடை அணிந்து ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் அங்கு சுற்றி திரிந்த சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து துப்பாக்கியால் சுட தொடங்கினர்.

வெட்டவெளி பகுதி என்பதால் உடனடியாக ஒளிவதற்கு கூட இடமில்லாமல் சிதறி ஓடிய சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். முதலில் ஒருவர் இறந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டது. இப்போது இந்த தாக்குதலில் 26 பேர் வரை இறந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதற்கட்டமாக பலியான 16 பேரின் பெயர்கள் வெளியாகி உள்ளன. காயமடைந்த தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 10 பேர் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் பயங்கரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் - திருமாவளவன்

பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாத குழுவான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடி சவுதி அரேபியா சென்றுள்ளதுடன், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேரத்தில் நடத்தப்பட்டுள்ள இந்த கொடூர தாக்குதல் நாட்டையே உலுக்கி உள்ளது. பிரதமர் மோடி, ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட இந்திய அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி அமிரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜேடி வான்ஸ், ரஷ்ய அதிபர் புடின் உள்ளிட்ட உலக தலைவர்களும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி, நிலவரங்களை கேட்டறிந்தார். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதனை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா, சிஆர்பிஎஃப் டிஜி, ஜம்மு காஷ்மீர் டிஜி, ராணுவ அதிகாரிகள் ஆகியோருடன் காணொளிக் காட்சி வாயிலாக அவசர ஆலோசனை நடத்தினார்.

பின்னர் இரவு 9 மணியளவில் விமானம் மூலம் ஜம்மு காஷ்மீர் புறப்பட்டுச் சென்றார் அமித்ஷா. ஸ்ரீநகரில் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இறந்தவர்களின் குடும்பதினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தாக்குதலில் பலியானோர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக ஜம்மு - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தோருக்கு 2 லட்சமும், லேசான காயங்களுடன் தப்பியோருக்கு 1 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இன்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 3 பேரின் வரைப்படம் வெளியாகி உள்ளது. அவர்கள் ஆசிப் ஃப்யூஜி, சுலைமான் ஷா, அபு தல்ஹா என அடையாளம் காணப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள பயங்கரவாதிகளின் வரைப்படங்களை வைத்து ராணுவம் தீவிரமாக தேடி வருகிறது.
இந்த நிலையில் இந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் 4 பயங்கரவாதிகளின் வரைபடங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த கும்பல் தாக்குதலுக்குப் பிறகு அருகிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. தேடுதல் வேட்டை தீவிரமாக நடக்கும் நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சந்தேக நபர்களை பற்றி தகவல் தருபவர்களுக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாடே உற்று நோக்கும் தீவிரவாத தாக்குதல் இணையத்தில் மக்கள் தேடலிலும் முதலிடம் பிடித்துள்ளது. தங்கள் உறவினர்கள் என்று மட்டும் பாராமல் நாட்டு மக்கள் மேல் அன்பு கொண்டவர்கள் அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் இதுகுறித்து இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர். தீவிரவாதிகளின் தாக்குதல் சார்ந்த தங்களது கருத்துகளை இணையத்திலும் ட்விட்டரிலும் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் #pehalugamterroristattack என்னும் ஹாஸ்டேக் இணையத்தில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் பாதுகாப்பு துறையின் தோல்வி... சீமான் பகீர் குற்றச்சாட்டு..!