காஷ்மீரின் பஹல்காம் மண்டலத்தில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் சிலர் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மத்தியப்பிரதேச மாநிலம், இந்தூர் நகரைச் சேர்ந்த எல்ஐசி நிறுவனத்தில் பணியாற்றும் சுஷில் (வயது58) என்பவரும் தீவரிவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஆவார். இவரின் மனைவி ஜெனிபர் (54),மகள் அகான்ஷா (32), மகன் ஆஸ்டின் (வயது27) ஆகியோரும் உடன் சென்றனர். தாக்குதலில் சுஷிலை, மகன் ஆஸ்டின் கண்முன்னே தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்தனர், தீவிரவாதிகளின் தாக்குதலை தடுக்க முடியாமல், மகன் ஆஸ்டின் ஒளிந்து கொண்டார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: மதிய உணவால் தப்பித்த கேரள குடும்பத்தினர்: பரபரப்பு தகவல்கள்..!
தந்தையின் இறுதிச்சடங்கு முடிந்தபின் தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டுக்கு ஆஸ்டின் அளித்த பேட்டியில் கூறியதாவது:


நான் என் பெற்றோருக்கு பின் சற்று தள்ளி நின்றிருந்தேன். என் தந்தை கழிவறைக்கு சென்றிருந்தார். அப்போது 15 வயது மதிக்கத்தக்க சிறுவர்கள் இருவர் கழிவறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்தனர். என் தந்தையிடம் அரபியில் கலீமா சொல்லுங்கள் என்றனர், ஆனால் என் தந்தை நான் கிறிஸ்தவர் எனக்குத் கலீமா தெரியாது என்றார். உடனே அந்த சிறுவர்கள், “என்ன கிறிஸ்தவரா, பெயில்ஸ்தீன், பெயில்ஸ்தீன்” என்று சொல்லிக்கொண்டே என் தந்தை மீது துப்பாக்கியால் சுட்டனர். என் தந்தை துப்பாக்கி குண்டு பட்டதும், என் தாய் ஜெனிபரை கழிவறைக்குள் தள்ளி கதவைத் தாழிட்டார்.

தீவிரவாதிகள் சென்றபின் நான் பார்த்தபோது என் தந்தை கீழே சடலமாகக் கிடந்தார், என் தாய் கழிவறையில் மயக்க நிலைலயில் இருந்தார். என் சகோதரி தொலைவில் இருந்து சம்பவம் கேட்டு ஓடி வந்தார், அப்போது கீழே விழுந்ததில் அவரின் காலிலும் அடிபட்டது” எனத் தெரிவித்தார். அகான்ஸா காலில் காயத்துடனே சர்க்கர நாற்காலியில் அமர்ந்தவாறு தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்றார்.

ஆஸ்டின் கூறுகையில் “நானும் 15 பயணிகளும் ஒருமறைவான இடத்தில் பதுங்கினோம். அப்போது தீவிரவாதி ஒருவர் தனது துப்பாக்கியால் குறைந்தபட்சம் 6பேரை கொலை செய்ததை கண்ணால் கண்டோம். ஒவ்வொருவரையும் முஸ்லிம், முஸ்லிம் என்று தீவிரவாதிகள் கேட்டனர். முஸ்லிம் என்று கூறியவர்களை கலீமா சொல்லுங்கள் என்று தீவிரவாதிகள் வற்புறுத்தினர். சில ஆண்களை பேண்ட்டை கழற்றக் கூறி, அவர்களின் அந்தரங்க உறுப்பை பார்த்து மதத்தை தெரிந்து கொண்டு சுட்டுத்தள்ளினர். தீவிரவாதிகள் குழுவில் 15 வயதுள்ள சிறுவர்களும் துப்பாக்கியுடன் இருந்தது வியப்பாக இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: பாதுகாப்பு குறைபாட்டை ஆய்வு செய்யணும்.. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தீர்மானம்..!