காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் சுற்றுலாப்பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியானதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது அமெரிக்கப் பயணத்தை பாதியிலேயே முடித்து நாடு திரும்பினார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு சென்ற ராகுல் காந்தி, பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடக்கும் சிறப்பு கூட்டத்தில் பங்கேற்க இருந்தார். ஆனால், பஹல்காம் தாக்குதல் குறித்து அறிந்ததும் ராகுல் காந்தி தனது பயணத்தை முடித்து நாடு திரும்பினார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு திரும்பிய நிலையில் டெல்லியில் இன்று நடக்கும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திலும் பங்கேற்கேற்றுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவின் பாசம்..! கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி.. ராகுல் காந்தி விளாசல்..!
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து அறிந்ததும் தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு இன்று நாடு திரும்பினார். டெல்லியில் (24ம்தேதி) இன்று நடக்கும் காங்கிரஸ் அவசர செயற்குழுக் கூட்டத்திலும் ராகுல் காந்தி பங்கேற்கிறார்” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே பிரதமர் மோடி, தனது சவுதி அரேபிய பயணத்தை அவசரமாக முடித்துக்கொண்டு நாடுதிரும்பினார். அதேபோல மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய அரசு எந்த முடிவு எடுத்தாலும் காங்கிரஸ் கட்சி ஆதரிக்கும், அதற்கு உறுதுணையாக ஆதரவாக இருக்கும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று அறிவித்தார்.
இந்நிலையில் இன்று நடக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக, ஆதரவாக காங்கிரஸ் கட்சி இருக்கும் என்று செயற்குழுக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல்ஹாம் தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்காவில் இருந்தவாரே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோரிடம் ராகுல் காந்தி நிலைமையை கேட்டறிந்தார்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிவிப்பில் “ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் இருந்த அப்பாவி சுற்றுலாப்பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதல் கேட்டு ஆழ்ந்த வேதனையும், வருத்தமும் அடைந்தேன். காஷ்மீரில் மீண்டும் வன்முறையை விதைப்பது கோழைத்தனமான செயல், இது கண்டிக்கப்பட வேண்டும். தீவிரவாதத்துக்கு எதிராக பரந்த அளவில் சமூக கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல் எதிரொலி; காஷ்மீர் பண்டிட்களுக்கு மத்திய அரசிடம் இருந்து பறந்த அதிரடி உத்தரவு!