ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் உடனடியாக முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனிடையே, ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதோடு, ஆயுதங்கள், வெடிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் அரங்கேறியுள்ள இந்த பயங்கரவாத தாக்குதலால் பேரதிர்ச்சியில் உறைந்துள்ள உலக நாடுகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளன.
இதையும் படிங்க: “எங்கள விட்டுடுங்க... நாங்க இதை பண்ணல”... ஆனா இந்தியாவை மறைமுகமாக எச்சரித்த பாகிஸ்தான்...!

இதுகுறித்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில் ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் சம்பவம் குறித்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்ததாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுடன் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடிக்கும் இந்தியாவின் சிறப்புமிக்க மக்களுக்கும் தங்கள் முழு ஆதரவு என்றும் உண்டு என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்வதாக பதிவிட்டுள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என கூறியிருக்கும் அவர். இதற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வெளியிட்ட பதிவில், “காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலால் மிகவும் வருத்தமடைந்ததாகவும் இந்த துயரமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்திய அரசு மற்றும் மக்களோடு துணைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் உள்ள இஸ்ரேல் உக்ரைன் நாட்டு தூதரக அதிகாரிகளும் பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகி, காயம் அடைந்ததற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. அதேபோல் காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நல்ல ஆரோக்கியம் பெறவும் விரும்புகிறோம் என ஈரான் தெரிவித்துள்ளது.

பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. மேலும், ''உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம். பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்'' என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
Sri Lanka strongly condemns the heinous terrorist attack that took place in Pahalgam, Jammu & Kashmir today.
🇮🇳🇱🇰
We extend our heartfelt condolences to the families of the victims and wish a speedy recovery to those injured.#Pahalgam #PahalgamTerroristAttack… pic.twitter.com/NQxceX1iHv
— Sri Lanka Tweet 🇱🇰 (@SriLankaTweet) April 23, 2025
சைப்ரஸ், சவுதி அரேபியா, ஜப்பான், சிங்கப்பூர், அர்ஜென்டினா, இலங்கை, பிரான்ஸ், உக்ரைன், எஸ்டோனியா, டென்மார்க், மோல்டோவா, லிதுவேனியா, ஜெர்மனி, கயானா உள்ளிட்ட நாடுகளும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளன.
இதையும் படிங்க: "இங்க நடந்ததை உங்க பிரதமர் மோடிக்கிட்ட சொல்லு".. பெண்ணை மிரட்டிய பயங்கரவாதி..!