கோடை வெயில் வாட்டியெடுக்கத் தொடங்கிவிட்டது. கோடைக் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம். அதற்கு சில பழங்களும் காய்கறிகளும் உதவுகின்றன.

தர்பூசணி: உடலின் வெப்பத்தைத் தணிப்பதிலும் தேவையான திரவச் சத்துகளை வழங்குவதிலும் தர்பூசணி சிறந்தது. இது சுமார் 90% தண்ணீர் அடங்கியதாக இருப்பதால், வெயிலால் ஏற்படும் தாகம், உடல் சோர்வு, நீரிழப்பு போன்ற சிக்கல்களைத் தவிர்க்க உதவுகிறது. தர்பூசணியில் விட்டமின் ஏ, பி6, சி மற்றும் பலவிதமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இது உடல் நலத்திற்குப் பல பயன்களை அளிக்கிறது.

நுங்கு: கோடையின் கடும் வெப்பத்திலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சிறந்த இயற்கை உணவு நுங்கு. இது உடல் வெப்பத்தைக் குறைத்து, வெயிலால் ஏற்படும் தாகம், சோர்வைக் குறைத்து உடல் சூட்டைத் தடுக்கிறது. நுங்கில் ஈரப்பதம், நார்ச்சத்து, பொட்டாசியமும் உள்ளது. இது ஜீரண சக்தியை மேம்படுத்தி, சிறுநீரகங்களைச் சுத்தமாக்கும். மேலும், தோலில் ஏற்படும் வெப்பப் புண்கள், தளர்வு போன்ற கோடை சார்ந்த பிரச்சினைகளையும் தடுக்கிறது.

கம்பங்கூழ்: கோடையில் வெப்பம் அதிகமாக இருக்கும் நேரத்தில், உடலைக் குளிர்விக்கச் சிறந்த பாரம்பரிய பானம் கம்பங்கூழ். கம்பு, கேப்பை போன்ற தானியங்களில் உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைந்துள்ளன. சுட்டெரிக்கும் வெயிலில், பசி இல்லாமல் புத்துணர்வுடன் இருக்க, காலை நேரத்தில் மோர் கலந்த கம்பங்கூழ் அருந்தலாம். இது உடல் சூட்டைக் குறைத்து, கொழுப்பைக் கரைக்கும், ரத்தத்தைச் சுத்தமாக்கும், மலச்சிக்கலைத் தீர்க்கும்.

முலாம்பழம்: கோடைக்காலத்தில் பரவலாகக் கிடைக்கும் பழமாக முலாம்பழம் உள்ளது. இதில் நிறைவான அளவில் ஏ, சி, இ போன்ற விட்டமின்கள், பீட்டா கரோட்டீன் போன்ற ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான சக்தியை வழங்குவதோடு, தோல், கண்களின் நலத்தையும் பேணுகின்றன.
இயற்கை பானங்கள்: மோர், எலுமிச்சைச் சாறு, பனங்கற்கண்டு கலந்து குடிக்கும் பானங்கள் உடலைக் குளிர்விப்பது மட்டுமல்லாமல், ஜீரண சக்தியையும் மேம்படுத்துகின்றன. மேலும், பனைவெல்லம், இளநீர், நெல்லிக்காய்ச் சாறு, கரும்புச் சாறு போன்றவை இயற்கையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்களைக் கொண்டவை.

நீர்க் காய்கறிகள்: வெயில் காலத்தில் தண்ணீரை மட்டும் பருகுவது போதாது; உடலின் நீர்நிலைச் சமநிலையைக் காக்க, நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகமாக உள்ள காய்கறிகளை உணவில் அடிக்கடி சேர்க்க வேண்டியது அவசியம். வெள்ளரிக்காய், புடலங்காய், சுரைக்காய், தக்காளி, பூசணிக்காய், பீர்க்கங்காய், பச்சை முட்டைகோஸ் போன்ற காய்கள் தண்ணீருடன் சேர்த்துத் தேவையான சத்துகளையும் வழங்குகின்றன.