இந்த ஆண்டின் முதலாவது சட்டன்ற கூட்டத்தொடரின் போதே வழக்கம்போல் மோதல் வெடித்துள்ளது. முதலில் தேசியகீதம் இசைக்கப்படாமல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பெற்றது தவறு எனக்கூறி தனது உரையை புறக்கணித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சட்டப்பேரவை மரபின்படி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் என்றும் அவை நடவடிக்கைகளின் இறுதியாக தேசியகீதம் இசைக்கப்படும் என்பதும் சபாநாயகர் அப்பாவுவின் கூற்று.

ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், அவரது உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து முடித்தார். கூடவே அச்சிடப்பட்ட சொற்கள் அவைக்குறிப்பில் இடம்பெறும் என்றும் இல்லாத செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். இதையடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், சட்டமன்ற ஜனநாயக மரபை மீறுவதையே ஆளுநர் தனது வழக்கமாக வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டி உள்ளார். உரையை வாசிக்காமல் போனது சிறுபிள்ளைத்தனமானது என்றும் தமிழ்நாட்டு மக்களையும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், நூற்றாண்டு கண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையையும் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்? என்பதே அனைவர் மனதிலும் எழும் வினா என்பதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கேள்வியாகும். அதேசமயம் தமிழ்த்தாய் வாழ்த்தின் மீது மிகுந்த மரியாதை உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேசிய கீதத்தை அவமதித்ததே ஆளுநர் தான்..அவருக்கு மட்டும் தான் தேச பக்தி இருக்கா..? கொந்தளித்த அமைச்சர் சிவசங்கர் ..!

இதனைத் தொடர்ந்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் ஆளுநரைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசின் ஏஜெண்ட்டாக தமிழ்நாட்டின் உரிமைகளில் அத்துமீறல்களைச் செய்யும் ஆளுநரைக் காப்பாற்றிடவும், தமிழ்நாட்டு மக்களின் கோபத்தை திசைமாற்றவும் வித்தைகளைச் செய்யும் அதிமுக- பாஜக கள்ளக் கூட்டணியைக் கண்டிப்பதாகவும் கூறியுள்ளார். இதனை வலியுறுத்தி திமுக சார்பில் 07.01.2025 காலை 10 மணியளவில் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் ஆர்.எஸ்.பாரதி அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூடுவதும், ஆளுநர் தனது உரையை வாசிக்காமல் வெளியேறுவதும், எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்து ஆளுங்கட்சி மீது குறைகூறுவதும் கடந்த 3 ஆண்டுகளாக தவறாமல் நடக்கும் நிகழ்வுகளாக உள்ளன. இதில் எப்போது மாற்றம் வரும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: த.வெ.க தலைவர் விஜய் ஏன் ஆளுநரை சந்தித்தார்..?புயலை கிளப்பிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!