சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் பெருங்கோட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாநகரம், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, நாமக்கல், கரூர், தர்மபுரி , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொள்ள வந்த அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசும்போது, நம்முடைய அனைத்து இந்திய தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ , அதை ஏற்று நாம் நடக்க வேண்டும். பேஸ்புக் , ட்விட்டர் போன்றவற்றில் அகில இந்திய தலைமை சொன்னதைத் தான் செய்ய வேண்டும், தவறான மீம்ஸ் போட்டால் அது நமக்கு எதிராக போய்விடும், எனவே எச்சரிக்கையாக மீம்ஸ்களை போட வேண்டும் என தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். அதேபோல் கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதை மறந்து விட்டு ஒன்றுபட்டு பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: Out of contact-ல் மு.க.ஸ்டாலின்... தமிழக மக்களுக்கு அச்சுறுத்தல்: அண்ணாமலை ஆத்திரம்..!

இக்கட்சியை தமிழகத்தில் வளர்க்க தற்போதுள்ள மத்திய அமைச்சரும், முன்னாள் மாநில தலைவருமான எல்.முருகன் அவர்கள் வேல் யாத்திரை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சிபி.ராதாகிருஷ்ணன் அவர்கள் ரத யாத்திரை மூலம் இக்கட்சியை வளர்த்தார் . அதேபோல் இக்கட்சியை வளர்க்க நாமும் பாடுபட வேண்டும். இப்பொழுது அமைந்துள்ள நம்முடைய கூட்டணி ஒரு உறுதியான கூட்டணி, நேர்மையான , இறுதியான கூட்டணி. எனவே இரட்டை இலையின் மேலே தாமரை மலர்ந்தே தீரும் எனக்கூறினார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர்கள் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன் கடந்த ஆண்டு 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் யாத்திரை அண்ணாமலை மேற்கொண்ட பாத யாத்திரை குறித்து குறிப்பிடவில்லை. கடந்த ஆண்டு ஜூலை 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட அண்ணாமலையின் பாத யாத்திரை 198 தொகுதிகளைக் கடந்து சென்னையில் நிறைவு செய்யப்பட்டது.

இந்த பாதயாத்திரைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, திரளான மக்கள் ஒன்று கூடி அங்காங்கே அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பையும் கொடுத்திருந்தனர். இதையடுத்து அண்ணாமலையைப் பின்தொடர்ந்து, ஏராளமான இளைஞர்கள் பாஜகவில் இணைந்ததால் தலைமையும் குஷியானதாக கூறப்பட்டது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு தான் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு தரும் அளவிற்கு அமித் ஷாவும், பிரதமர் மோடியும் சிந்தித்து வருகின்றனர். அப்படியிருக்க இதைப் பற்றி நயினார் நாகேந்திரன் ஒரு வார்த்தைக்கூட பேசாதது பாஜக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலையின் ஆட்களை தூக்கும் நயினார்... வந்த உடனே வேட்டை ஆரம்பம்!!