காஷ்மீரில் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரைக் கொன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாசுதீன் ஓவைசி, பள்ளிவாசல் முன்பு இன்று ஜூம்மா தொழுகைக்கு வரும் மக்களுக்கு கருப்பு துணி வினியோகம் செய்தார். இந்த கருப்புத்துணி அணிந்து, மக்கள் அனைவரும் இன்று தொழுகையில் ஈடுபட்டு, இந்த தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக ஓவைசி இந்த துணியை வினியோகம் செய்தார்.

காஷ்மீரின் பஹல்காம் மண்டலத்தில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி தீவிரவாதிகள் சிலர் சுற்றுலாப் பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்: ‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு விஷமத்தனம்..! அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கண்டிப்பு..!
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மக்களவை எம்.பி. அசாசுதீன் ஒவைசி நேற்று வீடியோ வெளியிட்டார். அதில் “ பஹல்காம் பகுதியில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டது உங்களுக்குத் தெரியும். இந்த தீவிரவாதத்தை, குற்றத்தைக் கண்டிக்கும் வகையில், நாளை(வெள்ளிக்கிழமை) நீங்கள் ஜூம்மா தொழுகைக்கு செல்லும்போது, கையில் கருப்புப்பட்டை அணிந்து செல்லுங்கள்.

இதன் மூலம் இந்தியர்களாகிய நாம், ஒருபோதும் அந்நியச் சக்திக்கு கட்டுப்படமாட்டோம், அமைதியையும், இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் குலைக்க அந்நிய சக்தியை அனுமதிக்கமாட்டோம் என்ற செய்தியை சொல்ல வேண்டும்.
இந்த தாக்குதல் காரணமாக வைத்து, தீவிரவாதிகள் நம்முடைய காஷ்மீர் சகோதரர்களை குறிவைக்க வாய்ப்பாகிவிடும். அதனால் இந்தியர்கள் அனைவரும், எதிரிகளின் தந்திரமான வலையில் வீழ்ந்துவிடாதீர்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, இன்று நண்பகல் ஜூம்மா தொழுகைக்காக ஹைதராபாத்தில் உள்ள ஷாஸ்திரிபுரம் மசூதிக்கு ஏராளமான முஸ்லிம்கள் வரத்தொடங்கினர். மசூதியின் வாசலில் நின்றிருந்த ஓவைசி, தொழுகைக்கு வந்த மக்களிடம் கருப்பு துணி வழங்கி கைகளில் கட்டிக்கொண்டு தொழுகையில் ஈடுபடுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 'துப்பாக்கியுடன் மிரட்டிய 15 வயது சிறுவர்கள்'.. உயிர் பிழைத்தவர் கண்ணீர் பேட்டி..!