சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி மற்றும் அந்நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தி உள்ளனர். இந்த ஆலோசனையின் போது, இந்தியா-சவுதி அரேபியா இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்த, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள வழிகளை ஆராய்வதில் விவாதங்கள் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. அப்போது, ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை பட்டத்து இளவரசர் கண்டித்ததுடன் தனது இரங்கலை தெரிவித்து உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை தொடர்பாக பேசிய சவுதி அரேபியாவிற்கான இந்திய தூதர் சுஹேல் அஜாஸ் கான், காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அந்நாட்டு பட்டத்து இளவரசர் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்ததுடன் இந்த விஷயத்தில் இந்தியாவிற்கு எந்த உதவியும் செய்வதாக உறுதியளித்துள்ளதாக கூறியுள்ளார். பயங்கரவாதம் தொடர்பான பிரச்சினைகளில் இந்தியாவும் சவுதி அரேபியாவும் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளதாகவும், தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் எதிரொலி! அவசர கதியில் நாடு திரும்பும் பிரதமர் மோடி...

தொடர்ந்து பேசிய அவர், மூலோபாய கூட்டாண்மை கவுன்சிலின் நோக்கத்தை விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகவும், ஒப்புக் கொள்ளப்பட்ட இரண்டு புதிய குழுக்களில் ஒன்று பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் மற்றொன்று சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு பற்றியது என்றும் கூறினார். மேலும், இந்தியாவில் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை கூட்டு முயற்சிகளாக நிறுவும் முடிவை இரு தலைவர்களும் வரவேற்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 21 குண்டுகள் முழங்க, ராணுவ விமான அணிவகுப்பு.. பிரதமர் மோடிக்கு சவுதியில் மாஸ் வரவேற்பு!!