ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அண்டை நாடு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தீவிரவாத தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா சென்றிருந்த அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாதிகளால் சிறிதும் இரக்கமின்றி சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர நிகழ்வு அறிந்து பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார்.

பயங்கரவாதிகளின் கோழைத்தனமான இந்த தாக்குதல் வன்மையான கண்டனத்துக்குரியது என்றும் இத்தனை ஆயிரம் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தும், 24 மணிநேரமும் உளவுத்துறையால் திறந்தவெளி சிறைபோல காஷ்மீர் முழுவதும் கண்காணிக்கப்பட்டும் இராணுவ சீருடை அணிந்து பயங்கரவாதிகள் பொதுவெளியில் சுதந்திரமாக உலவக்கூடிய பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது என்றால் இந்திய பாதுகாப்புத்துறையும், உளவுத்துத்துறையும் என்ன செய்து கொண்டிருந்தது என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: உரிமையை பறி கொடுத்துவிட்டு புலம்புவது அண்டர் கண்ட்ரோல்... நக்கலடித்த சீமான்..!

இக்கொடிய நிகழ்வு இந்திய ஒன்றிய பாஜக அரசின் அப்பட்டமான பாதுகாப்புத்துறை தோல்வி என்றும் இந்த நாட்டில் உளவுத்துறை என்ற ஒன்று இருக்கிறதா? அது செயல்படுகிறதா? அல்லது தாக்குதல் நடைபெறட்டும் என்று வேடிக்கை பார்த்ததா? என ஐயம் எழும் அளவிற்கு முற்று முழுதாக ஒன்றிய அரசின் உளவுத்துறை செயலிழந்து போயியுள்ளது எனவும் குற்றம்சாட்டினார்.

இதுபோன்ற இரக்கமற்ற கொடுந்தாக்குதல்கள் இனியும் நடைபெறாவண்ணம் தடுத்து, நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டியதும், காஷ்மீரில் அமைதி, பாதுகாப்பானச் சூழலை உறுதிசெய்து, அங்கு வாழும் மக்கள் இயல்பு வாழ்விற்கு திரும்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்திய ஒன்றிய அரசு மற்றும் காஷ்மீர் மாநில அரசின் முழுமுதற்கடமை என கூறிய சீமான், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: தப்பு செஞ்சவங்கள தண்டிக்காம விவசாயிகளை வஞ்சிக்கிறது நியாயமா..? சீமான் ஆவேசம்..!