சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் இருந்த காலத்தில் ஒருங்கிணைந்த திமுக மாவட்டமாக காணப்பட்டது. அதற்கு வீரபாண்டியார் தான் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். அவரது தலைமையில் சேலம் மாவட்ட திமுகவினர் மிகவும் கட்டுக்கோப்பான முறையில் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில், 2012ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் காலமானார். அதன்பிறகு மாவட்ட திமுகவை யார் வழிநடத்துவது என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தை அமைப்பு ரீதியாக மூன்றாக பிரிக்கலாம் என்று கட்சி தலைமை முடிவு செய்தது.

அதன்படி சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, சேலம் மத்திய மாவட்டம் என பிரிக்கப்பட்டன. இந்த பதவிகளுக்கு சரியான நபரை திமுக தேடிக் கொண்டிருந்தது. அப்போது நிர்வாகிகள் ஆதரவுடன் ராஜேந்திரன் (வடக்கு), வீரபாண்டி ஆ.ராஜா (கிழக்கு), டி.எம்.செல்வகணபதி (மேற்கு) ஆகியோர் நியமிக்கப்பட்டனர். ஒருகட்டத்தில் ஆ.ராஜாவின் செயல்பாடுகள் மீதான அதிருப்தியால் அவரை தூக்கிவிட்டு எஸ்.ஆர்.சிவலிங்கத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்தவர்கள் தமிழகத்தின் பகைவர்கள்... பாஜக, நாதக கட்சிகளை போட்டுத் தாக்கிய திமுக!
ஆனால், சிவலிங்கத்தின் செயல்பாடுகளில் திமுகவினருக்கு திருப்தி இல்லை. ''சிலர் வாகனங்களில் மண் அள்ளி செல்கின்றனர். உங்களுக்கு திறமை இருந்தால் ஏரிகளில் மண் ஓட்டிக் கொள்ளுங்கள். ஆனால் மாட்டிக்கொண்டால் நம்ம கட்சி நம்மை காப்பாற்றவில்லை என சொல்லி புலம்ப வேண்டாம் . அந்த விஷயத்தை புகாராக என்னிடம் கொண்டுவரக் கூடாது. திமுகவினருக்கு நான் எதையும் செய்து தர தயாராக இருக்கிறேன்'' என்றெல்லாம் பேசி அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வந்தவர்தான் இந்த சிவலிங்கம்.

இப்போது, ''பதவி இல்லை என்றால் நீங்கள் யாரோ? நான் யாரோ? என்று சொல்லி கட்சி அலுவலகத்திற்குள் தடுப்புச் சுவர் எழுப்பி இருப்பது அவர் மீது தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. சேலம் மாவட்டம் திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாக இருக்கும் அவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது சரியாக வேலை செய்யவில்லை என்றும், மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பிறகு கட்சி வளர்ச்சிப் பணிகளில் அவர் ஈடுபடவில்லை என்றும் தலைமை வரை புகார் சென்று அவர் எச்சரிக்கப்பட்டார்.

தற்போது திமுகவில் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் நடந்து வரும் நிலையில், தன்னுடைய பதவி காலியாகப் போகிறது என சிவலிங்கத்திற்கு தகவல் கசிய, தனக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருக்கக்கூடிய திமுக மாவட்ட தலைமை அலுவலகத்தின் ஒரு பகுதியை கட்சியின் உணவு கூடமாக பயன்படுத்த அனுமதித்து இருந்தார். அதை இப்போது கொடுக்காமல் தடுப்புச் சுவர் எழுப்பி தடுத்துக் கொண்டுள்ளார். கட்சியை வைத்து எவ்வளவோ சம்பாதித்த இவர், கட்சிக்காக இந்த இடத்தை விட்டுக் கொடுக்க கூடவா மாட்டார்? என்று அங்கலாய்த்து கொள்கிறார்கள் கழக உடன்பிறப்புகள்.
இதையும் படிங்க: அந்த மனுசனுக்கு நாக்குனு ஒண்ணு இருக்கா..? எடப்பாடியாரை குறி வைத்து குதறும் திமுக அமைச்சர்..!