துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அரசு பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக ஆளுநர் ரவி பேசியிருப்பதற்கு அமைச்சர் கோவி.செழியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு ஆளுநர் ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் பங்கேற்ற துணை வேந்தர்கள் இப்போது ஏன் பங்கேற்கவில்லை என்றும் இந்தக் கேள்விக்குப் பட்டம் படித்து மேதாவியாக இருக்க வேண்டியதில்லை எனவும் கூறினார்.

சட்டத்துக்குப் புறம்பாகத் துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டியிருக்கிறார் என்றும் அதில் பங்கேற்பது சட்டத்திற்கு எதிராக அமையும் எனக் கருதி, துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.,ஆளுநர் ரவிதான் சட்டத்தை மதிக்காமல் மாநாட்டைக் கூட்டியிருக்கிறார்கள் என்றால், துணை வேந்தர்களும் அப்படியே நடக்க வேண்டுமா என்ன எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் சாம்சங் நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு..! அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்..!

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித் துறை, என்.ஐ.ஏ. போன்ற அதிகார அமைப்புகளை வைத்துத்தான் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது என கூறிய அமைச்சர், தமிழ்நாடு அரசு எதையும் சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்வோம்., அப்படித்தான் மசோதாக்கள் விவகாரத்தில் வெற்றி பெற்றோம்., என்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போட்ட வழக்கு ராஜ்பவனைத் தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே என அடிவயிறு எரிந்து கொண்டிருப்பதாக விமர்சித்த கோவி.செழியன், அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது எனச் சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது என்றும் மிரட்டல் அரசியல் பா.ஜ.க.வின் டி.என்.ஏ-வில் ஊறிக் கிடக்கிறது எனவும் சாடியுள்ளார். மிரட்டுவது உங்கள் டி.என்.ஏவில் இருக்கலாம்; ஆனால், துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏவில் இருக்கிறது என கூறினார்.
இதையும் படிங்க: துணைவேந்தர்கள் மிரட்டப்பட்டுள்ளனர்..! தமிழக அரசு மீது ஆளுநர் பரபரப்பு புகார்..!