பெங்களூரு போன்ற பெரிய நகரில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவது இயல்புதான். இங்கொன்றும், அங்கொன்றும் நடக்கத்தான் செய்யும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
கடந்த 3ம் தேதி பாரதி லேஅவுட் பகுதியில் அதிகாலை நேரத்தில் இரு பெண்கள் நடந்து சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத ஒருவர் ஒரு பெண்ணை சுவற்றின் மீது தள்ளி பாலியல் துன்புறுத்தல் செய்துவிட்டு தப்பிவிட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் போலீஸிடம் புகார் அளிக்கவே அந்த நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வராவிடம் இரு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது குறித்து நிருபர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில் “ பெங்களூருவில் எங்கு இதுபோன்ற சம்பவம் நடந்தாலும் உடனே ஊடகங்கள் கவனத்துக்கும், மக்கள் கவனத்துக்கும் வந்துவிடும். பெங்களூரு போலீஸ் ஆணையர் பி. தயாந்தாவிடம் பேசியுள்ளேன், நகரில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் தீவிரப்படுத்தக் கூறியுள்ளேன்.
இதையும் படிங்க: கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவி.. கழுத்தை அறுத்து கொன்ற கணவன்.. கர்நாடகாவில் பரபரப்பு..!

போலீஸார் இரவுபகல் பாராது,மழை வெயில் பாராது பணியாற்றி வருகிறார்கள். அதனால்தான் பெங்களூரு நகரம் அமைதியாக இருக்கிறது. பெங்களூரு போன்ற பெரிய நகரில் இதுபோன்று பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது இயல்புதான். அங்கொன்றும், இங்கொன்றும் இதுபோன்ற சம்பவம் நடக்கத்தான் செய்யும்.
போலீஸார் விழிப்புடன் இருக்கக் கோரி உத்தரவிட்டுள்ளேன், பீட் முறையை பின்பற்றி தொடர்ந்து போலீஸார் காவலில் இருக்க உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, ரோந்தை அதிகப்படுத்தக் கூறியுள்ளேன். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரைப் பிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். போலீஸாரிடம் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். பீட் காவல் முறை நிச்சயம் பலன் அளிக்கும்” எனத் தெரிவித்தார்.

பெங்களூரு போன்ற பெரிய நகரில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது இயல்புதான் என்ற அமைச்சரின் வார்த்தை சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. ஏராளமான பெண்கள், பெண்ணிய ஆர்வலர்கள் கர்நாடக அமைச்சருக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குப்பைக்கு வரி.. பெங்களூருவில் இன்று முதல் அமல்..!