சென்னை மாதவரம் தணிகாசலம் நகர் பகுதியை சேர்ந்தவர் உமா பிரகாஷ். வயது 19. இவர் மேற்கண்ட முகவரியில் வாடகை வீட்டின் வசித்து வருகிறார். இவரது தந்தை மாயாண்டி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டார். தாயார் மல்லிகா. பெரவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் பல்பொருள் அங்காடியில் வேலை செய்து வருகிறார்.
உமா பிரகாஷ் ஆவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாலை நேரத்தில் கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 26 வது தெருவில் உள்ள சூப்பு கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். அவ்வாறு இவர் சூப்பு கடையில் வேலை செய்யும் போது சரித்திர பதிவேடு ரவுடியான கார்த்திக் என்கின்ற மேடு கார்த்திக் என்பவர் தினமும் சூப்பு குடித்துவிட்டு பணம் தராமல் கடன் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இதனால் உமா பிரகாசுக்கும், கார்த்திக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் உமா பிரகாஷ் பணம் தராமல் சூப்பு தர முடியாது எனக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் நேற்று முன்தினம் மதியம் 3 மணி அளவில் உமா பிரகாஷ் கல்லூரி முடித்து தனது இருசக்கர வாகனத்தில் கொளத்தூர் கிழக்கு தெரு வழியாக வரும்போது அவரை வழிமறித்து உள்ளான்.
தன்னுடன் வந்த அஜய் என்ற நபரின் உதவியோடு உமா பிரகாஷை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு ஆங்காங்கே வண்டியை நிறுத்தி அடித்துள்ளார். நேற்று இரவு 12 மணியளவில் கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் உமா பிரகாஷை இறக்கி விட்டு சென்று விட்டார்.
இதையும் படிங்க: மெட்ரோவில் வேலை வேணுமா? 20 லட்சம் செலவாகுமே..! நீதிபதி பெயரில் பயிற்சி வக்கீல் மோசடி..!

காயங்களுடன் உமா பிரகாஷ் வீட்டிற்கு சென்று உள்ளார். மகனின் நிலையை கண்டு பதறிய தாயிடன் நடந்தது குறித்து கூறி உள்ளார் உமா பிரகாஷ். பின்னர் தனது தாயாரின் உதவியுடன் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து உமா பிரகாஷ் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனி விவேகானந்தா தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்கின்ற மேடு கார்த்திக் (வயது 22) மற்றும் கொளத்தூர் பஜனை கோவில் தெரு பகுதியை சேர்ந்த அஜய் என்கின்ற லாசர் (வயது 24) ஆகிய இருவரும் உமா பிரகாஷை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து அழைத்துச் சென்று அவரை அடித்து துன்புறுத்தியது தெரிய வந்தது.

இதனை அடுத்து நேற்று இருவரையும் கைது செய்த கொளத்தூர் போலீசார் இருவர் மீதும் கடத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சூப் கடை ஒன்றில் குடும்ப பொருளாதார நிலை காரணமாக பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த இளைஞரிடம் ஓசியில் சூப் கேட்டு தாக்குதல் நடத்திய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கடத்தலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: இரவில் செக்யூரிட்டி வேலை.. பகலில் ஹெராயின் விற்பனை.. கில்லாடி வடமாநில இளைஞன் கைது..!