இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே கடந்த ஜனவரியில், 42 நாட்களுக்கான முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அது முடிந்தபின், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதற்கான ஒப்பந்தத்தில் இஸ்ரேல் பல்வேறு நிபந்தனைகள் விதித்தது. குறிப்பாக பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் தாக்குதல் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஹமாஸ் அதை ஏற்கவில்லை. இதைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. பணய கைதிகளை மீட்கவும், ஹமாஸ் ஆயுதக்குழுவினரை முழுமையாக ஒழிக்கும் நோக்கிலும் காசா முனையில் இஸ்ரேல் தொடர்ந்து தரைவழி, வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த போரில் பாலஸ்தீனத்தை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். 2 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வரும் போரில், காசாவில் இதுவரை 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: உன்னை எப்படிம்மா கட்டிப்பிடிப்பேன்..? போரின் ரணத்தை உலகிற்கு உணர்த்தும் ஒற்றைப் புகைப்படம்..!

இதனிடையே இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காசாவில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் பெண்கள், குழந்தைகள் என கூறப்படுகிறது. மேலும், இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் தரைமட்டமான கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருந்த புல்டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கவோ, இடிபாடுகளை அகற்றி சரி செய்யவோ போதிய கனரக வாகனங்களின்றி காஸா நிர்வாகம் தவித்து வருகிறது.

நட்பு நாடுகளின் உதவியால் சில கனரக வாகனங்கள் இடிபாடுகளையும் கட்டடக் குவியல்களையும் அகற்றி மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காசாவில் மக்கள் தஞ்சம் அடைந்துள்ள பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் தஞ்சம் அடையும் பகுதிகளை தேடித் தேடி இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அழிப்பதால் அங்குள்ள மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இந்தியா நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறாங்க! தரமான பதிலடி இருக்கு.. அண்ணாமலை பரபர பேச்சு..!