இந்தியாவின் பொருளாதாரம் 2025-ஆம் ஆண்டில் 6.2%, 2026ஆம் ஆண்டில் 6.3% ஆக வளரும் என்று சர்வதேச செலாவணி நிதியம் கணித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று சர்வதேச செலாவணி நிதியம் (IMF) கணித்துள்ள நிலையில், உலகப் பொருளாதாரத்தை மீண்டும் வழிநடத்த இந்தியா தயாராக உள்ளது. சர்வதேச செலாவணி நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் ஏப்ரல் 2025 பதிப்பின்படி, இந்தியாவின் பொருளாதாரம் 2025ஆம் ஆண்டில் 6.2 சதவீதமாகவும், 2026ஆம் ஆண்டில் 6.3 சதவீதமாகவும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய சூழலில் உறுதியான நிலையாகும்.

உலகளாவிய வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு இடையிலும் இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி வலுவாகவே உள்ளது. இந்த நிலைத்தன்மை, இந்தியாவின் பொருளாதார அடிப்படைகளின் வலிமையை மட்டுமல்லாமல், சிக்கலான சர்வதேச சூழலில் வேகத்தை நிலைநிறுத்துவதற்கான அதன் திறனையும் குறிக்கிறது. இந்தியாவின் பொருளாதார நிலைத்தன்மையை சர்வதேச செலாவணி நிதியம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், உலகளாவிய வளர்ச்சியின் முக்கிய உந்துதலாக நாட்டின் பங்கு தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகிறது.
இதையும் படிங்க: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்... அப்பாவி மக்கள் உயிர்ழப்பு; உலக முஸ்லிம் லீக் கண்டனம்!!

உலகப் பொருளாதார ஆய்வறிக்கை என்பது உலகளாவிய பொருளாதார போக்குகள் மற்றும் கொள்கை சவால்கள் குறித்த சர்வதேச செலாவணி நிதியத்தின் முக்கிய அறிக்கையாகும். இடைக்கால புதுப்பிப்புகளுடன் ஆண்டுக்கு இரண்டு முறை இது வெளியிடப்படுகிறது. இது வளர்ந்து வரும் மற்றும் வளரும் பொருளாதாரங்களை உள்ளடக்கிய கணிப்புகளை வழங்குகிறது.
ஏப்ரல் 2025 வெளியீட்டில், இந்தியாவைப் பொறுத்தவரை, வளர்ச்சிக் கண்ணோட்டம் ஒப்பீட்டளவில் மிகவும் நிலையானது என குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச செலாவணி நிதியம் இந்திய பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சியைக் கணித்துள்ளது.

சர்வதேச செலாவணி நிதியம் மற்ற முக்கிய உலகளாவிய பொருளாதாரங்களுக்கான வளர்ச்சி மதிப்பீடுகளையும் வெளியிட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பு 4.0 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது உலக பொருளாதார கண்ணோட்டத்தின் ஜனவரி 2025 பதிப்பில் 4.6 சதவீதமாக இருந்தது. இதேபோல், அமெரிக்காவின் வளர்ச்சி 90 அடிப்படை புள்ளிகள் குறைந்து 1.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற நாடுகளை பொறுத்தவரை இந்த மாற்றங்கள் இருந்தபோதிலும், இந்தியா வலுவான வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கிறது.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 100%, 200%-லாம் இல்ல 3,521% வரி; சீனாவுக்கு 245% வரி.. டிரம்ப் அதிரடி.. இந்தியாவின் நிலை என்ன?