காஷ்மீரின் பஹல்காம் மண்டலத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன் தீவிரவாதிகள் சிலர் சுற்றுலாப்பயணிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தத் தாக்குதலுக்கு துணை புரிந்த, தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த பாகிஸ்தானுக்கு தூதரக உறவு, சிந்துநதி ஒப்பந்தம், எல்லைகள் மூடல், விசா ரத்து உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இந்நிலையில் கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த 11 பேர் கொண்ட குடும்பத்தினர் மதிய உணவு சாப்பிடச் சென்றதால் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர்தப்பிய சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: தொழிலதிபர், மனைவி கொடூர கொலை.. ஆடைகளின்றி கிடந்த சடலங்கள்.. கோட்டயத்தை குலைநடுங்கவிட்ட சம்பவம்..!
இந்த தாக்குதல் நடந்த சம்பவத்துக்கும், இந்த குடும்பத்தினர் உணவு சாப்பிட்ட ஹோட்டலுக்கு 2 கிமீ தொலைவு மட்டுமே இருந்தது. ஒரு மணிநேரம் சாப்பாட்டுக்கு எடுத்துக்கொண்டதால், தாக்குதல் நேரத்தில் அங்கு இந்த குடும்பத்தினர் இல்லை, ஒருவேளை சாப்பிடாமல் சென்றிருந்தால் நிச்சயமாக தீவிரவாதிகள் தாக்குதலை எதிர்கொண்டிருப்பார்கள்.
கண்ணூர் எஸ்என் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் லாவண்யா. கண்ணூரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். முதல்முறையாக காஷ்மீரின் பஹல்காம் பகுதிக்கு தனது கணவர் அல்பி ஜார்ஜ், 3 குழந்தைகள் அனுஷ்கா, அவந்திகா, அனந்திகா, மைத்துனர்கள், உறவினர்களுடன் சுற்றுலா சென்றார்.

பஹல்காம் பகுதிக்கு செல்லும் வழியில் மதிய உணவுக்காக பிற்பகல் 1.30 மணிக்கு ஒரு ஹோட்டலில் நிறுத்தி சாப்பிட்டுள்ளனர். ஏறக்குறைய 2 மணிநேரம் ஹோட்டலிலேயே செலவிட்டதால் அதன் பின்புதான் பஹல்காம் பகுதிக்கு கேரள குடும்பத்தினர் சென்றனர். ஆனால் தாக்குதல் நடந்த சம்பவம் பிற்பகல் 3 மணிக்கு நடந்துள்ளது. கேரள குடும்பத்தினர் சாப்பிட்டு முடித்து அங்கு சென்ற 5 நிமிடங்களுக்கு முன்புதான் தீவிரவாதிகள் தாக்குதலை முடித்துவிட்டு சென்றுள்ளனர்.
இது குறித்து கேரளாவைச் சேர்ந்த லாவண்யா கூறுகையில் “நாங்கள் மட்டும் மதிய உணவுக்காக ஹோட்டலில் நிறுத்தாமல் இருந்திருந்தால், தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பகுதியில் இருந்திருப்போம். கடவுளின் தலையீட்டால்தான் நாங்கள் உயிர் தப்பினோம்.

நாங்கள் பஹல்காம் பகுதிக்கு வந்தபோது, ஹெலிகாப்டர்கள் பறந்தவாறு இருந்தன, சிஆர்பிஎப் வாகனங்கள் வேகமாக அணிவகுத்து சென்றனர், உள்ளூர் போலீஸாரும் வேகமாகச் சென்றனர். என்ன நடக்கிறது, எதற்காக வேகமாகச் செல்கிறார்கள் என்று எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, பலரிடம் கேட்டபோது அவர்கள் உள்ளூர் மொழியில் பதில் அளித்ததால் எங்களுக்கு புரியவில்லை.
அதன்பின் ஒரு டாக்ஸி ஓட்டுநர் அங்கிருக்கும் சூழலைச் சொல்லி, இது இங்கு சாதாரண விஷயம், நீங்கள் பயணத்தை தொடரலாம் என்றார். ஆனால் தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் சத்தம் கேட்டதால் எங்களுக்கு பதற்றம் இருந்தது. குதிரைகள், ரைடர்களுடனும், ரைடர்கள் இல்லாமலும் சாலையில் ஓடின. ஏதோ தவறு நடந்துள்ளது, மிகப்பெரிய விபரீதம் நடந்துள்ளது என்பதை உணர்ந்து, உடனடியாக நாங்கள் பஹல்காம் பகுதியிலிருந்து திரும்பினோம். ஹோட்டலுக்கு வந்த பின்பு தொலைக்காட்சியைப் பார்த்த பின்புதான் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த சம்பவம் தெரிந்தது.

சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்டு காஷ்மீர் மக்களும் மிகுந்த கோபத்துடனும், வருத்தத்துடனும் இருந்தனர். எங்களைப் போன்ற குடும்பங்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. இது சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கான உச்சக் காலம், தாக்குதலால் உள்ளூர் வியாபாரமும் பேரழிவிற்கு உள்ளாகியுள்ளது. அழகான பகுதியான காஷ்மீரில் தீவிரவாதத்தால் அதன் அழகு ஆபத்தாக மாறிவிட்டது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கேரளாவில் அதிகரிக்கும் யானைகள் அட்டகாசம்.. பழங்குடியினர் இருவர் பலி.. விசாரணைக்கு உத்தரவு..!