காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அங்கு இருந்த சுற்றுலாப் பயணிகள் சுமார் 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களைத் தவிர்த்துவிட்டு ஆண்களைக் குறிவைத்துத் தாக்கியுள்ளனர்.

இதை அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: காங்கிரஸ் கிளப்பிய புது சர்ச்சை... கொந்தளிக்கும் பாஜக... பின்னணி என்ன?

சிந்து நீரை நிறுத்துவது போருக்கு சமமான நடவடிக்கை என பாகிஸ்தான் தெரிவித்திருந்தது. இதனிடையே பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என குலைநடுங்கிப் போய் கிடக்கிறது அந்த நாடு. இதனால் எல்லையில் ஆத்திரமூட்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. இதற்கு நமது ராணுவத்தினரும் பதிலடி தந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தானின் விமானங்கள், இந்திய வான்பரப்பில் நுழையவும் பாகிஸ்தானின் கப்பல்கள், இந்திய துறைமுகங்களில் நுழையவும் தடை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் டெல்லியில் நாளை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான மேலும் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற இரு அவைகளின் சிறப்பு கூட்டம்... பிரதமருக்கு கார்கே எழுதிய முக்கிய குறிப்பு!