நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்விச் செயற்பாட்டை, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கது என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "சமீப நாட்களில், மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் வருடாந்திர மாநாட்டை ஆளுநர் மாளிகை மற்றும் மாநில அரசுக்கு இடையிலான அதிகார மோதல் எனத் தவறாக காட்சிப்படுத்தும் சில தவறான ஊடக செய்திகள் பரப்பப்படுகிறது. இத்தகைய செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை மற்றும் தவறான எண்ணத்தை உருவாக்குவதாக உள்ளது.
2022ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில், தமிழ்நாடு ஆளுநரால் உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களின் மாநாடு திட்டமிட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதில், தமிழ்நாடு மற்றும் நாடு முழுவதும் உள்ள கல்வி மற்றும் தொழில்துறையை சேர்ந்த சிறந்த நிபுணர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இம்மாநாட்டில் கல்வி நிறுவனங்களை முன்னேற்றும் புதிய சவால்கள், வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பற்றி விவாதிக்கப்படுகின்றன.

மாணவர்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்காக அவர்களது நிறுவனங்களை எப்படி போட்டித் திறன் வாய்ந்ததாக மாற்றலாம் என்பது குறித்தும் உரையாடல்கள் நடைபெறுகின்றன. இம்மாநாடுகளின் நேரடி பலன்கள், கணக்கீடு செய்யக்கூடிய அளவுகோள்களில் தற்போது தெளிவாக தெரிகிறது. முன்னர், குறிப்பாக மாநில பல்கலைக்கழகங்கள் தன்னிச்சையாக செயல்பட்டு ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இல்லாமல் செயல்பட்டன. இது மாணவர்களுக்கு இழப்பாகவும், கல்வி வளர்ச்சிக்குப் பாதகமாகவும் இருந்தது.
ஒவ்வொரு ஆண்டும் மாநாட்டுக்கான திட்டமிடல் சில மாதங்கள் முன்னதாகவே தொடங்கப்படுகிறது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் கல்வி, தொழில்நுட்ப நிபுணர்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட்டு மாநாட்டின் வடிவம், விவாதிக்கப்படும் தலைப்புகள், உரையாற்ற வேண்டிய நிபுணர்கள் குறித்து முடிவெடுக்கப்படுகின்றது. தொடர்புகொண்டு அவர்கள் பங்கேற்பதற்கான முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இந்த ஆண்டும் ஜனவரி மாதமே தயாரிப்புகள் தொடங்கப்பட்டது. பல கூட்டங்கள் நடத்தப்பட்டு பயனுள்ள மாநாடாக மாற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அடுத்த ஆப்பு.? தமிழக ஆளுநருக்கு எதிரான உத்தரவு கேரள ஆளுநருக்கு பொருந்துமா.? உச்ச நீதிமன்றம் விசாரணை!

கல்வி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக நடத்தப்படும் நன்னெறி மற்றும் நல்ல நோக்கத்துடன் நடத்தப்படும் கல்விச் செயற்பாட்டை, சில ஊடகங்கள் தவறாக விளக்கி, சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் இணைத்து, இதை தமிழ்நாடு கவர்னர் மற்றும் மாநில அரசுக்கு இடையிலான மோதலாக கட்டமைக்க முயற்சி மேற்கொள்வது வருந்தத்தக்கதாகும். இவை அனைத்தும் மாண்பை குலைப்பதாகவும், உண்மைக்கு புறம்பாகவும் இருக்கின்றது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழைய ஓய்வூதிய திட்டம் எப்போதுதான் செயல்படுத்தப்படும்.? விலாவரியாக விளக்கிய தங்கம் தென்னரசு.!!