சேலம் மாவட்டம் ஓமலூர் காடையாம்பட்டி அருகே உள்ள கஞ்சநாயக்கன்பட்டி அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோயில் அமைந்து உள்ளது. இந்த கோயிலில் பல ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில் ஊர்மக்கள் ஒன்று கூடி இந்த ஆண்டு திருவிழா நடத்துவதாக முடிவு செய்தனர். அதன்படி பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருவிழா தொடங்கியது. ஊர் மக்கள் அனைவரும் உற்சாகமாக பங்கு பெற்றனர். நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் 15 ஆம் நாள் திருவிழாவான நேற்று, முக்கிய நிகழ்வாக அம்மனுக்கு சீர் கொண்டு வரும் நிகழ்ச்சி இரவு நடைபெற்றது. சீர் கொண்டு செல்லும் நிகழ்வில் பட்டாசு வெடித்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மீதமுள்ள பட்டாசுகளை பைக்கில் வைத்து எடுத்து வந்துள்ளனர். சீர் கொண்டுவரும் ஊர்வலம் ஆனது சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் கிராமம் பழைய சினிமா தியேட்டர் பகுதியில் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறி உள்ளன.

அப்போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் பட்டாசு வெடியுடன் வந்த வாகனமும் சேதம் அடைந்தது. இதில் கஞ்சநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் கார்த்திக் 14 வயது சிறுவன் தமிழ்ச்செல்வன் 29 வயதுடைய செல்வராஜ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் 20 வயதான லோகேஷ் படுகாயம் அடைந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவிகுமார் மற்றும் தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையை தொடங்கினர்.
இதையும் படிங்க: வெள்ளையடிக்க வந்து நோட்டமிட்ட திருடன்.. உஷாரான தம்பதி.. மாடி வழியாக ஏறிக்குதித்து துணிகர திருட்டு..!

தொடர்ந்து காடையாம்பட்டி தீயணைப்பு துறையினர் சேதம் அடைந்த வீடுகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் ஆகியவைகளை தண்ணீரை கொண்டு அணைத்தனர். சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கௌதம் கோயல் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பட்டாசுகளை பைப்பில் வைத்து வெடித்ததாகவும் அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது பட்டு உடல் சிதறி இறந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த லோகேஷ், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் காரணமாக பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. கோயில் திருவிழாவின் போது பட்டாசுகள் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பட்டாசு வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதியுதவியையும் அறிவித்துள்ளார். கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 4 பேர் இறந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: டாக்டரே இப்படியா? கடத்தல்காரனாக மாறிய பல் மருத்துவர்.. சொத்துக்காக அண்ணண் மீது தாக்குதல்..!