காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 22ம் தேதி 26 சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெளிவரும் தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் பேட்டியளித்துள்ளார். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ம் தேதி சுற்றுலாப் பயணிகள் கூடியிருந்த இடத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் 26 பேரை கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றுவிட்டு தப்பினர். இந்த கொடூரமான சம்பவத்துக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: அமெரிக்கா, பிரிட்டனுக்கு பாகிஸ்தான் செய்த 'அழுக்கு வேலை..'! அம்பலப்பட்ட இரட்டை வேஷம்..!
இந்த கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் தூதரக உறவை முறித்துக்கொண்ட மத்திய அரசு சிந்துநதிநீர் ஒப்பந்தத்தையும் நிறுத்தி வைத்தது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த அனைவரும் வெளியேறவும் மத்திய அரசு உத்தரவிட்டது. பாகிஸ்தான் அரசு தங்கள் வான்வழிப் பகுதியையும் இந்தியா பயன்படுத்தத் தடைவிதித்தது.

தீவிரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானுக்கு பங்கு இருக்கிறது என்று இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால், தங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் மறுத்துவிட்டது. இந்தியாவின் இந்த ராஜதந்திர பதிலடிகள் பாகிஸ்தானுக்கு கடும் எரிச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் கூறியதாவது:
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் சர்வதேச விசாரணைக்கும், சர்வதேச விசாரணையாளர்கள் விசாரணைக்கும் தயாராக இருக்கிறது, எந்த விசாரணைக்கும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கவும், உள்நாட்டு அரசியல் நோக்கங்களுக்காகவும் தீவிரவாத தாக்குதலை அடிப்படையாக இந்தியா பயன்படுத்துகிறது. எந்த ஆதாரமும் இல்லாமல், எந்த விசாரணையும் இல்லாமல் பாகிஸ்தானை தண்டிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவுடன் போர் உருவாவதை நாங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் இந்தப் போர் உருவாகினால் இந்த ஆசிய மண்டலத்தில் பேரழிவை ஏற்படுத்தும். பஹல்கான் தாக்குதலுக்கு டிஆர்எப் எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. லஷ்கர்-இ-தொய்பா வலுவிழந்துவிட்டது. பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் தாக்குதல்களைத் திட்டமிடவோ அல்லது நடத்தவோ அதற்கு எந்த திறனும் இல்லை.

பாகிஸ்தானில் லஸ்கர் தி தொய்பா தீவிரவாத அமைப்புக்கு எந்த கட்டமைப்பும் இப்போது இல்லை. லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களில் எஞ்சியிருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வீட்டுக் காவலில் உள்ளனர், சிலர் சிறையில் உள்ளனர். அவர்கள் தீவிரவாத தாக்குதல் நடத்தும் அளவு சுறுசுறுப்பாக இல்லை.
இவ்வாறு கவாஜா முகமது ஆசிப் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒருத்தனும் தப்பிக்க கூடாது..! இந்தியாவின் பதிலடி அப்படி இருக்கணும்..! ஆவேசமான மோடி..!